பக்கம் எண் :

109பொன்வண்ணத் தந்தாதி

194.விரிகின்ற ஞாயிறு போன்றது மேனி;யஞ் ஞாயிறுசூழ்ந்(து)
எரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை; அச்சடைக்கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது கண்டம் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள தாலெந்தை ஒண்பொடியே.

195.பொடிக்கின் றிலமுலை; போந்தில பல்;சொற் பொருள்தெரியா;
முடிக்கின் றிலகுழல்; ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங் கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி யேன்பிறர் கட்டுரையே.


குறிப்புரை: 'உலகர் மின்மினியை வெறாது நகைத்து ஏற்றல்போல, நீயும் எனது கவிகளை வெறாது நகைத்து ஏற்றருள்வாய்' என்பது கருத்து. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க. "பொருள் ஆர்" என்பதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. 'இறைவன் தனக்கு அர்ப்பணிக்கப்படும் பொருள்களின் தன்மையை நோக்காது, அர்ப்பணிப்பவர்களது உள்ளத்தில் நிற்கும் அன்பையே நோக்குவான்' என்பதும் இதனால் உணர்த்தப்பட்டது. இச்செய்யுள் எடுத்துக்காட்டுவமையணி பெற்றது.

194. பொழிப்புரை: என் தந்தையாகிய சிவபெருமானுடைய திருமேனி விரிந்து விளங்குகின்ற ஞாயிற்று வட்டம் போன்றுள்ளது. எங்கும் வீழ்ந்து சுழல்கின்ற சிவந்த சடைகள் அந்த ஞாயிற்றைச் சுழ்ந்து சுடர்விடுகின்ற வெவ்விய கதிர்களைப்போன்றுள்ளன. அச்சடைக்குக் கீழ் உள்ள கண்டம், அந்த ஞாயிற்றின் கதிர்கட்கு அஞ்சி ஓடி ஒளிந்த கரிய இருள்போன்றுள்ளது. கண்டத்தின் கீழ் மார்பில் பூசப் பட்டுள்ள திருநீறு, அந்த இருட்குக் கீழாய்த் தோன்றிப்படரும் வெள்ளிய முகில்கள் போன்றுள்ளது.

குறிப்புரை: சரிதல் - தோற்று நீங்குதல். சடை, சாதி யொருமை. 'அச்சடைக்கீழ்க் கண்டம் இருள்போன்றது' என இயைக்க. வெண்முகில், சூல் கொள்ளாத மேகம். பெருமானது திருவுருவத்தை வகுத்துப் புகழ்ந்தபடி. இது மாலை யுவமையணி.

195. பொழிப்புரை: (என் மகளுக்கு) இன்னும் கொங்கைகள் முகிழ்ப்படையவில்லை. பல் விழுந்து முளைக்கவில்லை. அவளது சொற்கள் பொருள் விளங்கும் அளவிற்குத் திருந்த வில்லை. கூந்தல் கூட்டி முடிக்க வரவில்லை. ('பேதைப் பருவத்தினள்' என்றபடி) ஆயினும் இவள் நிலைமையைக் கேளுங்கள்; பெரிய வெள்ளநீர் எப்பொழுதும் இருக்கும் சிவந்த சடைமுடியையும், மேகம் போன்ற கண்டத்தையும் உடைய சிவபெருமான் தன்மேனியில் அணிந்துள்ள