பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை122

212.எண்ணம் இறையே பிழைக்குங் கொலாமிமை யோரிறைஞ்சும்
தண்ணம் பிறைச்சடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென்
உண்ணன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா(து) இராப்பகல் எய்கின்ற காமனுக்கே.

என்றும் உம்மையும், திருவருளால் புழுவாய்ப் பிறத்தல் இன்மையின் "பிறந்திடினும்" என்னும் உம்மையும் எதிர் மறைப் பொருள.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

எனவும்,

பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.

எனவும் திருவள்ளுவர் அறம் பற்றிக் கூறியதனை இங்கு ஒப்பு நோக்குக.

212. பொழிப்புரை: தேவர் பலராலும் வணங்கப்படும், குளிர்ந்த அழகிய பிறையை அணிந்த சடைமுடியை உடையவனும், சங்கால் ஆகிய குழையை அணிந்தவனும் ஆகிய சிவபெருமான் வந்து என் உள்ளத்தின்கண் நீங்காது இருத்தலை அறிந்திருந்தும் எனது அழகிய நிறத்தை அழித்தற் பொருட்டு இரவும், பகலும் ஊனோடு உறக்கமும் இன்றித் தன் அம்பு களைத் தொடர்ந்து எய்து கொண்டிருக்கின்ற மன்மதனுக்கு, 'யாம் வெல்வோம்' என்னும் எண்ணம் சிறிதாயினும் நீங்காதோ!

குறிப்புரை: சிவபெருமானைக் கண்ட பின் காமனால் கண்ணும் உறங்காது மெலிகின்றவள் தன் மெலிவை மறைத்துக் காமனைத் தோல்வியுறுபவனாக வைத்து இகழ்ந்தாள்; மக்களி லுள்ள இவள் தோற்பதன்றித் தேவரில் உள்ள காமன் தோற்பது எங்குளது! இதனால் அவட்குப் பெருமிதம் பிறந்ததாயினும், கேட்டார்க்கு நகை பிறந்தது.

நனவினான் நம்நீத்தார் என்பர்; கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்.1

என்றாற் போல்வனவற்றை இங்கு நினைவு கூர்க.

'இறையேனும்' என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. கொல், ஐயப்பொருட்டாய், இகழ்ச்சி குறித்து நின்றது. ஆம், அசை. "சங்கரன்" என்பதைச் "சங்கக் குழையன்"



1. திருக்குறள் - 1220