| 215. | கொட்டும் சில;பல சூழநின் றார்க்கும்குப் புற்றெழுந்து நட்ட மறியும் கிரீடிக்கும்; பாடும்; நகும்;வெருட்டும்; வட்டம் வருமருஞ் சாரணை செல்லும்; மலர்தயங்கும் புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டான் பூதங்களே. | | 47 |
பூசிய தோளை உடையவளே, நீ வினா வாகச் சொல்லிய அந்த ஊர்தான் (ஆரூர்தான்) நாம் இருவருக்கும் ஊர்' என்றார். பின்பு யான் இவர் முதலில் வைத்து எண்ணத் தக்க 'சலவர்' (வஞ்சனைக்காரர்) என்றேன். அதற்கு அவர், 'பந்து ஏந்தும் கையை உடையவளே, நீ இரண்டாவதாகச் சொன்னதும் உண்மைதான் (சலத்தை - நீரை - கங்கையைத் தாங்கினவர்) என்றார். (இப்படி அவர் நகையாடிக் கூறினமை யால் 'அவர் என்னைக் காதலிக்கின்றார்' என்று கருதி, யான், 'மார்பில் கொத்துக் கொத்தாகப்பல மாலையை அணிந் துள்ளவரே, உமை அறிய (உம்மை நான் - இன்னார்- என்று நன்கு அறியும்படி சொல்லுவீர்' என்று கேட்டேன். அவர் சொல் ஒன்றும் சொல்லாமல் கையில் இருந்த உடுக்கையை அடித்தார். (என்னை அவர் பக்கத்தில் உள்ள உமாதேவி பார்த்துத் தெரிந்து கொள்ளும்படிச் செய்தார்.) குறிப்புரை: 'இவர் மிகவும் வல்லாளர்' என்பது குறிப்பெச்சம். 'திருவாரூரை இடமாகக் கொண்டிருப்பவரும், உலகம் அழியா திருத்தற் பொருட்டுக் கங்கையைச் சடையில் தாங்கியவரும் ஆகிய சிவபெருமான் தம்மை அடைய விரும்பு வோர்க்குத் தமது அருளாகிய கையைக் கொடுத்துக் காப்பார்' என்பது குறிப்புப் பொருள். "அந்தணர்" என்பது இங்கு, "அறவோரை"1 (துறவிகளை)க் குறித்தது. 215. பொழிப்புரை: மலர்கள் விளங்குகின்றனவும், பறவைகள் வாழ்வனவும் ஆகிய பெரிய சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் எழுந்தருளியுள்ள இறைவனது படையாகிய பூதங்களுட் சில (அச்சமும், துன்பமும் இன்றிக் களித் திருத்தலால்) கைகளையும், பறைகளையும் கொட்டும் பல சிவபெருமானைச் சூழ்ந்து நின்று ஆரவாரிக்கும்; மற்றும் சில குப்புற வீழ்ந்தும் எழுந்தும் கூத்தாடும்; பல பல விளையாட்டுக்களைச் செய்யும்; பல பாட்டுக்களைப் பாடும்; சிரிக்கும்; ஒன்றை ஒன்று அச்சுறுத்தும்; வட்டமாக ஓடி வரும்; அணி வகுத்துச் செல்லும். குறிப்புரை: 'சிவபெருமானுக்கு ஆட்பட்டவர் கட்கு எந்த வகையான அச்சமோ துன்பமோ, கவலையோ இல்லை, "இன்பமே எந்நாளும்"2 என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
1. திருக்குறள் - 30. 2. திருமுறை - 6.98.1.
|