பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை136

230.நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை நாமெழுக;
ஏணார் இருந்தமி ழால்மற வேனுந் நினைமினென்றும்,
பூணார் முலையீர் நிருத்தன், புரிசடை எந்தைவந்தால்
காணா விடேன்கண் டிரவா தொழியேன் கடிமலரே.

62



புண்ணியச் செயலை விரும்பித்தான் நீர் வந்தீர்; பிச்சையிடும் புண்ணியச் செயலை விரும்பி வந்தீர்' என்றபடி. அதை, "புண்ணியம்" என்றது வஞ்சப் புகழ்ச்சி. "இரத்தல்" என்பதன் முன், 'இவ்வாறு' என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. 'பொல்லாது' என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. 'அம்மா' என்னும் அச்சக் குறிப்பு இடைச் சொல் இடைக் குறைந்து, "அமா" என வந்தது. 'சிவன் பிச்சை ஏற்பது, உயிர்களைத் தன்பால் சேர்த்துக் கொள்ளுதற் பொருட்டே' என்பது இதன் உட் கருத்து.

230.பொழிப்புரை: அணிகலன்கள் பொருந்திய தனங்களையுடைய தோழியர்களே, (உங்கள் உதவியை நாடாது) 'நாமே செல்வோம்' என்றால் (நாணம் தடுக்கின்ற) நாணம் உண்டாகாதபடி செல்லச் சமையம் வாய்க்கவில்லை. நடனம் புரிபவரும் புரியாகிய சடைகளையுடையவரும், உலகர் எல்லாராலும் 'எம் தந்தை' என்று போற்றப்படுபவரும் ஆகிய சிவபெருமான் (இங்கு வருவார்) வந்தால், நான் அவரைக் காணாமல் இருந்துவிடமாட்டேன். கண்டு, 'உம்மை யான், உம்மை அகப்படுத்தவல்ல பெரிய தமிழாற்பாடி மறவாதிருக்கின்றேன்; இதை நினைமின்' என்று சொல்லி அவர் அணிந்துள்ள வாசனை பொருந்திய மலர் மாலையை இரந்து வாங்கவும் செய்வேன்.

குறிப்புரை: 'முலையீர்', 'நாம் எழுக' என்றால் நாணாது நடக்க இடையில்லை' என மாற்றி ஒரு சொல் வருவிக்க. 'நாணாது' என்பது கடைக் குறைந்தது. இடை - சமையம். எண் - வலிமை, இருமை - பெருமை அஃது இங்கு விரிவைக் குறித்தது. 'சிவபெருமான் தமிழ் விருப்பன்' என்பதை, "நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்"1 என்பது முதலியவற்றால் அறிக. 'தமிழாற்பாடி' எனவும் ஒரு சொல் வருவிக்க. "உம்மை மறவேன்" என உருபு விரித்து மாற்றுக. "என்றும்" என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மையைப் பிரித்து, 'இரவாது' என்பதனுடன் கூட்டுக.

இது தூதுவிடக் கருதியாற், தோழியரோடு, புலந்து கூறியது. இதுவாயிலாக, தமிழாற் பாடுவோரைச் சிவ பெருமான் மிக விரும்புதல் குறிக்கப்பட்டது. "தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்"2 என்பது முதலியவற்றையும் காண்க.



1. திருமுறை - 7.88.8.
2. திருமுறை - 4.1.6.