பக்கம் எண் :

647திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

கட்டளைக் கலித்துறை

879.

நோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலால்
தாக்கிற் றரக்கன் தலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவாள்
ஒக்கிற்றுத் தக்கன் தலையுருண் டோடச் சலந்தரனைப்
போக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு தாளுடைப் புண்ணியனே.

18


- ஒருவனாகிய (தன்னோடு ஒப்பது பிறிதொன்று இல்லாதவனாகிய) தன்னையே, ‘உண்மையான மெய்ப்பொருள் திருவிடைமருதூர்ப் பெருமானேயாகையால், மெய்ப்பொருளை ஆயப் புகுந்த சமயங்கள் பலவும் தான் தான் அறிந்த அளவில் அம்மெய்ப்பொருளைப் பற்றிக் கூறும் கூற்றுக்கள் தம்முள் ஒவ்வாது இகலியிருப்பினும் அவை அனைத்தும் அப்பெருமானைப் பற்றிக் கூறும் கூற்றாகவே அமையும்’என்பதாம். இஃது யானையின் ஒவ்வோர் உறுப்பை மட்டும் கையால் தடவி முடித்து, ‘அவ்வவ்வுறுப்புக்களே யானை’எனக் கருதிக் கொண்டு யானையின் இயல்பைப் பற்றி குருடர்கள் தம்முள் இகலியுரைக்கும் உரைகள் யாவும் யானையின் இயல்பேயாதல் போல்வதாம். “அன்று என்றல், எதிர்ப் பக்கத்தவர் கூறும் உரையை மறுப்பவர் கூறுவது.“ஆம்” என்றல், தம் பக்கத்தவர் கூறும் உரையை உடன்படுவார் கூறுவது. ஆறு சமயங்களாவன மெய்ப்பொருளை ஆயப்புகுந்த ஆறு சமயங்கள். அவை ‘உலகாயதம், பௌத்தம், சமணம், சாங்கியம், தருக்கம், ஏகான்ம வாதம்’ - என்பன. உலகாயதம், “உலகமே மெய்ப்பொருள்”எனவும், பௌத்தம் “நிலையாமையே மெய்ப்பொருள்”எனவும், சமணம், “வினையே மெய்ப்பொருள்” எனவும், சாங்கியம்,” உயிரே மெய்ப்பொருள்” எனவும், ஏகான்மவாதம், “தன்னோடு ஒத்த ஒன்றோ, கீழான ஒன்றோ, தனக்கென்று ஓர் இயல்போ இல்லாதது மெய்ப்பொருள்”எனவும் கூறும். பிற சமயங்களின் மெய்ம்மைகள் எல்லாம் இவற்றுள்ளே அடங்குமாற்றையும், இவை அனைத்தும் சிவநெறிமெய்ம்மையுள் அடங்குதலையும் அறிந்து கொள்க.

879.குறிப்புரை: “நோக்கிற்று, தாக்கிற்று” முதலிய நான்கும் நோக்கியது, தாக்கியது முதலிய பொருளவாய், அவ்வத் தொழிலைக் குறித்தன. அவற்றிற்கெல்லாம் வினைமுதல் இறுதிக்கண் உள்ள“புண்ணியன்” என்பது. ‘புண்ணியம்’ என்பது பாடமாயின் அதுவும் உபசார வழக்கால் புண்ணிய னையே குறித்து நிற்கும். அரக்கன், இராவணன், ஓக்கிற்று - உயர எடுத்தது. மருது - மருதூர். நுதி - நுனி. நுதி விரல் - விரல் நுதி; இலக்கணப் போலி மொழி. ‘உயிர் போக்குதல்’ என்பது ‘அழித்தல்’என்னும் பொருட்டாய் நிற்றலின் அது, “சலந்தரனை”என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.