பக்கம் எண் :

16கல்லாடம்[கடவுள்வாழ்த்து]



வினோடு தங்குதல் செய்து, அறுதாய் முலை உண்டு-கார்த்திகை மகளிராகிய தாயர் அறுவருடைய முலைப்பாலை உண்டருளி; உழல்மதில் சுட்ட தழல் நகை பெருமான்- விசும்பின்கண் திரியா நின்ற முப்புரத்தைச் சுட்டெரித்த நெருப்பினைட்யுடைய நகைப்பினையுடைய சிவபெருமான்; வணங்கி நின்று ஏத்த குருமொழி வைத்தோய்-நின்னைத் தொழுது நின்று வாழ்த்தாநிற்ப. அப் பெருமானுக்கு ஆசிரியனாய் மறைமொழி செவியறிவுறுத்தோய்! என்க.

     (வி-ம்.) இமயம் சுனைபூத்த என மாறுக. பூத்தமலராகிய தொட்டில் என்க. முற்றறிவினோடு பிறத்தலின் அறிவில் தங்கி என்றார். அறுதாய்-கார்த்திகை மகளிராகிய தாய்மார் அறுவர்பாலும் என்க. உழல் மதில்-வானத்தே திரிகின்ற முப்புரம். தழல் நகை: பண்புத் தொகையுமாம். பெருமான்-சிவபெருமான். குருமொழி-ஆசிரியர் செவியறிவுறூஉ. இப்பகுதியோடு,

“வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
கடவுள் ஒருமீன் சாலினி யொழிய
அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்
மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே
நிவந்தோங் கிமயத்து நீலப் பைஞ்சுனைப்
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே”

(பரிபாடல். செவ்வேள். 43 : 50)

எனவரும் பரிபாடற் பகுதியையும் ஒப்பு நோக்குக. முருகப்பெருமான் சிவபெருமானுக்குக் குருமொழி வைத்ததனை,

“தேமொழி யத்தன் பெறவோந் தனக்கன்று சேணுலகத்
தேமொழி யத்தஞ் சினங்காட் டவுணரைச் சேமகரத்
தேமொழி யத்தம் புயமலர் சூடிகை சிந்தவென்ற
தேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததென்றே”

என்றற்றொடக்கத் தனவற்றா னினிதுணர்க. இனி, சிவபெருமான் மதில் சுட்டதனை,

“ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
நாகா நாணா மலைவில் லாக
மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய
மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்
பாக முண்டபைங்கண் பார்ப்பான்”

(பரி. 5. 22 : 27)

எனவரும் பரிபாடலாலும் உணர்க.