பக்கம் எண் :

மூலமும் உரையும்169



அகன்ற இடத்தைப்பற்றி; நெடுங்கார் கிடந்து படும்புனல் பிழியும்-நெடிய முகில் கிடந்து தன்னிடத்துண்டாகிய நீரைச் சொரிதற்கிடனான; கூடல் வீற்றிருந்த நாடகக் கடவுள்-மதுரைமா நகரத்திலே எழுந்தருளியுள்ள கூத்தினையுடைய இறைவனுடைய என்க.

     (வி-ம்.) பாற்கடல் தவளமாடத்திற்கும் திருமால் முகிலுக்கும் பண்புவமை. திருமால் கிடப்பது முகில் கிடத்தற்குத் தொழிலுவமை. நாடகமென்றது கதைதழுவி வரும் கூத்து. ஆயினும் ஈண்டு அப்பொருள் குறியாது கூத்தென்னும் பொதுமை குறித்து நின்றது. இனி நாடு அகம் எனக் கண்ணழித்து நாடப்பட்ட அகக்கூத்தெனினுமாம். அக்கூத்தாவது தேசி வடுகு சிங்களம் என மூவகைப்படும். இவை, சாத்துவிகம் முதலிய மூன்று குணமும் பற்றி ஆடுதலின் அகமார்க்கமாயிற்று. “அகத்தொழில் சுவையான் அகமெனப் படுமே” எனவும் ‘தேசி வடுகுடனே சிங்களமென் றோதினார், பேசிலிவை பிஞ்ஞகன் முன்னா டியவா, மோசையா மொத்துடனே, பாணியாவுடனே, இசையுடனே வைத்து முதலாய் வந்திறும்” எனவும் வருவனவற்றால் உணர்க.

25-31: பொங்.................தவத்தானும்

     (இ-ள்) பொன் சுடர் விரித்த கொத்து அலர் கொன்றையும்-பொன்னொளியை விரித்தாற்போன்று கொத்தாக அலர்ந்த கொன்றை மலரும்; தாளியும் அருகும் வால்இழை எருக்கமும் கரந்தையும் வன்னியும் மிடைந்த செஞ்சடையில்-தாளியும் அறுகும் வெள்ளிய இதழினையுடைய எருக்கமாலையும் கரந்தைமாலையும் வன்னிமாலையும் செறிந்த சிவந்த சடையின்கண்; இரண்டு ஐஞ்ஞூறு திரண்ட முகம் எடுத்து-ஓராயிரமாகக் கூடிய முகங்களை நிமிர்த்தி; மண்புலன் அகழ்ந்து திக்கு நிலைமயக்கி-மண்ணினிடத்தைத் தோண்டித் திசைகளை நிலைகெடுத்து; பிரியாக் கதமோடு-ஒருகாலமும் விளையாத வெகுளியோடே; ஒருபால் அடங்கும் கங்கையிற் படிந்த-ஒருபக்கத்திலே அடங்கியிருக்கும் கங்கையின்கண் ஆடிய; பொங்கு தவத்தானும்-மிக்க தவத்தையுடைமையானும் என்க.

     (வி-ம்.) கொன்றை முதலியன மிடைந்த சடையில் ஒருபால் அடங்கும் கங்கை என்க. இரண்டைஞ்ஞூறு-ஆயிரம். கதம்-சினம். பகீரதனுடைய முயற்சியால் வானத்தினின்றும் இறங்கிய கங்கை செருக்குடையளாய் ஆயிரம் முகங்கொண்டு நிலத்தைக் குழித்துத் திசைகளை நிலைமயக்கிப் பேராரவாரத்தோடு இறங்கா நிற்ப இறைவன் அப்பெருங்கங்கையைத் தன் சடையில் ஒரு துளி போல எளிதில் ஏற்றான் என்பது தோன்ற இரண்டைஞ்ஞூறு...........ஒருபாலடங்குக் கங்கை என்றார். கங்கையில் நீராடுதலே சிறந்த தவமாதலின் கங்கையிற் படிந்த பொங்குதவம் என்றார்.

31-33: அந்நெடு.....................ஏற்றத்தானும்