பக்கம் எண் :

மூலமும் உரையும்251



பரித்தலால் தண்மதி எனவும் இயைத்துக்கொள்க. இலை-இலைவடிவிற்றாகிய உறுப்பு. புகர்-புள்ளி. இப்பகுதியில் மூன்றடிகளிலும் முரணணிதோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க.

4-10: வேதியன்......................................சுடர்

     (இ-ள்) ஆலவாய் அமுது அயில் வாழ்க்கை தேவர்கோன்-திருவாலவாய் என்னும் மதுரையம்பதியின்கண் அமிழ்த முண்ணும் வாழ்க்கையினையுடைய அமரர்கோமான்: இருநான்கு மதமலை பிடர்சுமந்து ஓங்கி-அயிராவதம் முதலிய திசையானைகள் எட்டும் தம்முடைய பிடரின்கட் சுமந்து ஓங்கும்படி; வேதியன் படைக்க மாலவன் காக்கப் பெறாதோர் திருஉருதான்-பிரமன் படைக்கவும் திருமால் காக்கவும் பெறாததோர் அழகிய உருவத்தினை; பெரிது நிறுத்தி இழிச்சிய-பெரிதாக நிறுத்திக் கீழிறக்கிய; செம்பொன் மணிகுயிற்றிய கிகரக் கோயிலுள்-சிவந்த பொன்னாலும் மணிகளாலும் இயற்றப்பட்ட முடியினையுடைய திருக்கோயிலின்கண்; அமையா தண் அளி உமையுடன்-ஒழியாத குளிர்ந்த அருளையுடைய அங்கையற்கண்ணம்மையோடே; உறைதரும் நிறைந்த மூலக் கொழுஞ்சுடர்-எழுந்தருளிய அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த முதன்மையுடைய கொழுவிய ஒளிப்பிழம்பாகிய இறைவன் என்க.

     (வி-ம்.) வேதியன்-பிரமன். வேதியன் படைக்கவும் மாலவன் காக்கவும்படாத திருவுரு என்றது சுயம்புலிங்கத்தை. மதமலை-யானை. இருநான்கும் எனல்வேண்டிய முற்றும்மை தொக்கது. ஓங்கி-ஓங்கும்படி. இருநான்குமதமலை என்றதனால் திசையானைகள் என்பது பெற்றாம். அவை ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபூமம், சுப்பிரதீபம் என்பன. குயிற்றிய-இயற்றிய. சிகரம்-முடி. உமையுடன் உறைதரும் கொழுஞ்சுடர். நிறைந்த கொழுஞ்சுடர, மூலக்கொழுஞ்சுடர எனத் தனித்தனி கூட்டுக. உலகிலுள்ள ஏனைய இலிங்கங்களுக்கெல்லாம் இவ்விலிங்கம் மூலலிங்கமாதல்பற்றி மூலக்கொழுஞ்சுடர என்றார். இதனை,

“பொன்னெடு மேரு வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம்
 வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசி யாதிப்
 பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும்
 முன்னரிக் கடம்பின் மாடே முளைத்ததிச் சைவ லிங்கம்”
                                     (திருவிளை. மூர்த்தி. 2)

எனவும்,

“அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
 கப்புவிட் டெழுந்த விந்தக் காரன மிரண்டி னாலும்
 ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன விந்தத்
 திப்பிய விலிங்க மூல விலிங்கமாய்ச் சிறக்கு மன்னோ”
                                    (திருவிளை. மூர்த்தி. 3)