|
வித்து; என்உளம்
குடிகொண்டு-எளியோனுடைய நெஞ்சிலே எழுந்த்ருளி இருந்து; இரும்பயன் அளிக்கும்-பெரிய
பயன்களை வழங்காநின்ற; கள்அவிழ் குழல்சேர் கருணை எம்பெருமான்-தேன் ஒழுகுகின்ற மலர்மாலையணிந்த
உமையம்மையாரைத் தன்னொரு கூற்றிலே சேர்த்த திருவருட் பிழம்பாகிய எம்பெருமானும்
ஆகிய இறைவனுடைய என்க.
(வி-ம்.) பொதியப்
பொருப்பன்-பொதிய மலையையுடைய பாண்டியன், மதியக் கருத்தினை என்பதற்கு மதியம் எனக்
கண்ணழித்து அம் சாரியை எனலுமாம். மதி-உள்ளம் என்க. கொங்குதேர் வாழ்க்கை என்னும்
தொடக்கத்தையுடைய செந்தமிழ்ப் பாடல் என்க. அப்பாடல் வருமாறு:
| |
கொங்குதேர்
வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே |
(குறுந்.
2) |
என்பதாம். பாண்டியன்
மனக்கருத்தாவது-மகளிர் கூந்தலுக்குச் செயற்கையானன்றி இயற்கையின் மணம் உளதோ இலதோ
என்னும் ஐயம். இவ்வாறு ஐயுற்ற பாண்டியன் தன் உள்ளக் கருத்தினை அறிந்து செய்யுள்
செய்யும் புலவர்க்கு ஆயிரம் செம்பொன் வழங்குவேன் என்று அறிவித்து ஆயிரம்பொன்
பொதிந்த பொதியினைப் புலவர் முன்னே தூக்கினான். சங்கப் புலவர்கள் பெரிதும் ஆராய்ந்தும்
அவன் கருத்துணர்ந்து செய்யு செய்யும் மதுகை இலராயினர். அப்பொழுது ஆலவாய் எம்பெருமான்
தருமி என்னும் ஓர் அன்பன் வேண்டுகோட் கிணங்கிக் கொங்குதேர் வாழ்க்கை என்னும்
இச் செய்யுளைப் பாடி அத்தருமியின்பாற் கொடுத்து அப்பொற்கிழியைப் பெற்றுக்கொள்ளும்படி
திருவருள் புரிந்தார் என்பது வரலாறு. இவ் வரலாற்றினைத் திருவிளையாடற் புராணத்தில்
52. தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் விரிவாக உணரலாம். என் உள்ளம் என்பது
எளியோனாகிய என் உள்ளம் என்பதுபடநின்றது. இரும்பயன்-பெரும்பயன். கள்ளவிழ் குழல்:
பன்மொழித்தொகை. உமையம்மையார் என்க.
15:
மலர்ப்...............................சிலம்ப
(இ-ள்) மலர்ப்பதம்
நீங்கா-செந்தாமரைமலர் போலும் திருவடிகளை நீங்காத; உளம் பெருஞ்சிலம்ப-நெஞ்சினையுடைய
பெரிய மலைநாட்டுத் தலைவனே என்க.
(வி-ம்.)
பிறையோனும் எம்பெருமானும் ஆகிய இறைவனுடைய பதம் நீங்காத உளத்தையுமடைய சிலம்பனே
என இயைத்துக்கொள்க. மலர். ஈண்டு சிறப்பால் தாமரை மலரைக்குறித்து நின்றது. சிலம்பன்-குறிஞ்சித்திணைத்தலைவங்
எனவே இச்செய்யுட்குத் திணை குறிஞ்சி என்க.
|