பக்கம் எண் :

மூலமும் உரையும்323



வரணீய முதலிய எட்டுக் குற்றங்களையும் வேரோடறுத்து; இ ஆறு எதிர்ப்பட்ட அருந்தவத்திருவினிர்-இப்பாலை வழியிலே எம்மை எதிர்ப்பட்ட செய்தற்கரிய தவமாகிய செல்வத்தை யுடையீர் என்க.

     (வி-ம்.) நிலவு, பகல்: ஆகுபெயர்கள். இவை திங்கள் ஞாயிறு என்னும் பொருளன. புண்ணியம்-சிவபுண்ணியம். அருள்பொடி திருவருளை எய்துவதற்குக் காரணமான திருநீறு. புண்ணியப்பொடி அருட்பொடி எனத் தனித்தனி கூட்டுக. “பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு” எனவும் “முத்தி தருவது நீறு” எனவும் பெரியாரும் பணித்தருளுதல் காண்க. (சம்பந்தர், திருமுறை-2). இருவினை-நல்வினையும் தீவினையும். நல்வினையும் பிறப்பிற்குக் காரணமாகலின் திருஉடல் என்றாள். மூழ்கி-மூழ்கப்பட்டு. உடல்நாடு என மாறுக. வரிதல்-கட்டுதல். கொடிக்காய் என்றது சுரைக்காயை. பத்தர்-நீர்ப்பத்தர்; கமண்டலம். சுத்தி-மேலே கூறினாம். வலந்தோள் எனமாறுக. வீழ்-விழுது. வேணி-சடை. இரு நான்கு குற்றம்-ஞானவரணீயம், கோத்திரம், அந்தராயம் முதலிய எண்வகைச் செல்வங்களுண்டாகும் செருக்கினை எண்வகைக் குற்றம் என்றாள் எனினுமாம். என்னை? தவமிகுதியாலே இவ்வணிமா முதலிய செல்வம் கைவரப்பெற்ற துறவோரும் இவற்றாற் செருக்கெய்தி யோகநெரியைக் கைவிட்டுப் பொய்ப்பொருளிற் சிக்கி உழலுதலுண்டாகலின் அக்குற்றம் இல்லாத பெரியீர்! என்று புகழ்ந்தபடியாகக் கொள்க. அணிமா முதலியன எட்டாகலின் குற்றமும் எட்டாயின என்க. அடி-வேர். ஆறு-வழி. தவத்திருவினீர்-தவத்தையே செல்வமாக உடையீர் என்றவாறு.

8-13: தணியா.........................நிற்க

     (இ-ள்) தணியாக் கொடுஞ்சுரம்-வெப்பந் தணியாத கொடிய இப்பாலை நிலமானது; தரும் தழல் தாவி-வழங்கா நின்ற தீ மேலெழுந்துபோய்; பொன் உடல் தேவர்-பொன்னிறமான உடம்பினையுடைய தேவர்கள்; ஒக்கலொடு மயங்கி-தத்தம் சுற்றத்தாரோடு அறிவு மயக்கமுற்று; கொண்மூ பல்திரை புனலுடன் தாழ்த்தி-முகில்களைப் பல அலைகளையுடைய வானக் கங்கையோடே தம்முலகின் கீழிருத்தி; பொதுளிய தருவினுள் புகுந்து-தளிர் செறிந்த கற்பகச் சோலையுள் நுழைந்து; இமையாது மருந்து பகுத்து உண்டு-கண்களிமையால் இருந்து அமிழ்தத்தைத் தம்முள் பகுத்துண்டு; வல் உயிர் தாங்கும்-தம்முடைய வலிய உயிரைப் பாதுகாக்கும்படி செய்கின்ற; வட்டை வந்தனை என-இப்பாலைநில வழியிலே நீ எமக்கிரங்கி நீவிர் கூறும் இம்முகமன் மொழிகள் அமைவனவாக என்க.