|
அடையாக்கினர். கொற்றவைக்குத்
திருமாலுக்குரிய அடையாளங்களும் சிவனுக்குரிய அடையாளங்களும் உரியனவாம் என்பதனை,
| |
ஆனைத்தோல்
போர்த்துப் புலியு னுரியுடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலைமே னின்றாயால்
வானோர் வணங்க மறைமேன் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்
வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரியதிரி கோட்டுக் கலைமிசைமே னின்றாயால்
அரியரன்பூ மேலோ னகமலர்மேன் மன்னும்
விரிகதிரஞ் சோதி விலக்காகி யேநிற்பாய்
சங்கமுஞ் சக்கரமுந் தாமரைக் கையேந்திச்
செங்க ணரிமான் சினவிடைமே னின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை யுருவாய் மறையேத்த வேநிற்பாய்
ஆங்குக்,
கொன்றையுந் துளவமுங் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப்பிணைய றோண்மே லிட்டாங்
கசுரர் வாட வமரர்க் காடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே (சிலப். 2. 12. 8, 9, 10, 11)
|
எனவரும் இளங்கோவடிகள்
திருவாக்கானும் உணர்க. கவைத்தலை மணிவேல் என்றது முத்தலைச் சூலத்தை. பிறைத்தலைக்
கன்னி-கொற்றவை. கோட்டம்-கோயில்.
21-24:
சூடகம்..............................பள்ளியும்
(இ-ள்)
சூடகம் தோள்வளை கிடந்து வில்வீச-கங்கணமும் தோள்வளையும் திருத்தோள்களிலே கிடந்து
ஒளிவீசா நிற்ப; யாவர்தம் பகையும் யாவையின் பகையும்-யாவரது பகைமையையும் விலங்கு
முதலிய அஃறிணை உயிர்களின் பகைமையையும்; வளனில் காத்து-உலகினை வளம் செய்தலாலே
ஒழித்து உலகினைப் பாதுகாத்து; வருவன அருளும்-மேன்மேலும் வருகின்ற நலன்களை யெல்லாம்
தந்தருளுகின்றவனும்; ஊழியும் கணம் எனெ உயர்மகன் பள்ளியும்-நெடிய ஊழிக்காலமும் தனக்கு
ஒரு நொடிப்பொழுதாக வளர்கின்றவனும் ஆகிய வடுகக் கடவுளின் கோயிலும் என்க.
(வி-ம்.)
சூடகம்-ஒருவகை அணிகலன். வில்-ஒளி. யாவர்தம் பகையும் யாவையின் பகையும் எனவே உயர்திணை
உயிர்கலால் வரும் பகையும் அஃறிணை யுயிர்களால் வரும் பகைமையும் என்றாயிற்று. இப்பகையெல்லாம்
வறுமை காரணமாக வருதலின் அவற்றை ஒழித்துப் பாதுகாத்
|