பக்கம் எண் :

334கல்லாடம்[செய்யுள்41]



தருளுகின்றான் என்பது கருத்து. ஊழியும் கணம் என்றது அக்கடவுள் நித்தியன் என்பதுபட நின்றது. வடுகன்-வயிரவன்.

25-27: உவாமதி....................................உறையுளும்

     (இ-ள்) உவாமதி கிடக்கும் குண்டுகடல் கலக்கி-நிறைத்திங்கள் இருத்தற்கிடனான ஆழமான திருப்பாற்கடலைக் கடைந்து; மருந்து கைக்கொண்டு வானவர்க்கு ஊட்டிய-அக்கடலிற் றிரண்ட அமிழ்தத்தைக் கைக்கொண்டு தேவர்களை உண்பித்த; பாகப்பக்கம் நெடியோன்-சிவபெருமானுடைய ஒரு பாகத்திலுள்ள திருநெடுமால்; உறையுளும்-எழுந்தருளிய திருக்கோயிலும் என்க.

     (வி-ம்.) உவாமதி-நிறைதிங்கள். திங்கள் திருப்பாற் கடலில் பிறத்தலின் அது கிடக்கும் கடல் என்றார். குண்டுகடல்-ஆழமான கடல்; என்றது திருப்பாற் கடலை. மருந்து-அமிழ்தம். நெடியோன்-திருமால். உறையுள்-இருப்பிடம்.

28-32: தும்பி..............................பக்கமும்

     (இ-ள்) தும்பி உண்ணாத் தொங்கல் தேவர்-வண்டுகள் மூசாத மலர்மாலை யணிந்த தேவர்கள்; மக்களொடு நெருங்கிய வீதிப் புறமும்-இறங்கி வந்து மக்களோடே நெருங்குவதற்குக் காரணமான திருவிதியிடங்களும்; மதுநிறை பிலியிற் பூவொடு நெருங்கி-தேனை நிரம்பத் துளிக்கின்ற மலர்களோடே செறிவுற்று; சூர்அரக் கன்னியர் உடல்பணி செய்யும்-சூரா மகளிர்கள் தம்முடலையும் நடுங்குதல் செய்கின்ற; கடைக்கால் மடியும்-ஊழிக்காற்றும் தடைபடுதற்குக் காரணமான; பொங்கர் பக்கமும்-சோலைப் பகுதிகளும் என்க.

     (வி-ம்.) தேவர்கள் அணியும் மலர்மாலையில் வண்டுகள் மொய்த்தலின்மையின் தும்பியுண்ணத் தொங்கற்றேவர் என்றார்; பழைய உரையாசிரியர் இதற்குப் பொன்னரிமாலை எனப் பொருள் கூறினார். இறைவனை நாளும் வழிபடுதற்குத் தேவர்கள் வீதியின்கண் வந்து நிறைதலின் தேவர் மக்களொடு நெருங்கிய வீதி என்றார். பிலிற்றுதல்-துளித்தல். சூராக் கன்னியர்-ஒருவகைத் தேவமகளிர். தேவமகளிரின் உடலையும் நடுங்கச் செய்யும் கடைக்கால் என்க. இனிச் சூரர மகளிர் பொங்கரில் புகுவோர் உடலைப் பனி செய்யும் பக்கம் எனினுமாம். கடைக்கால்-ஊழிக்காற்று. பொங்கர்-சோலை.

33-37: ஊடி................................கூடல்

     (இ-ள்) ஊடி ஆடுநர்-தத்தந் தலைவரோடு ஊடித் தனித்தனி நீராடுகின்ற மகளிரை; பிணங்கி திரையொடு தோழியில் திர்க்கும்-தான் மாறுபட்டு அவர்களின் தோழிமார்போலே தன் அலையாகிய கைகளாலே அவர்தம் ஊடலைத்