பக்கம் எண் :

மூலமும் உரையும்335



தீர்த்து வைக்கின்ற; வையைத் துழனியும்-வையைப் பேரியாற்றின் ஆரவாரமும்; அளவா ஊழிமெய்யொடு சூழ்ந்து-அளவு படுத்தப்படாத ஊழி இறுதியிலும் மெய்ம்மையால் சூழப்பட்டு; நின்று நின்று ஓங்கி-என்றும் நிலைபெற்று உயர்ந்து; நிலைஅறம் பெருகும்-நிலைபெறுதற்குக் காரணமான அறத்தை வளர்க்கின்ற; ஆனாப் பெரும்புகழ் அருள்நகர் கூடல்-நீங்காத பெரிய புகழையும் திருவருளையும் ஒருங்கே உடைய நகரமாகிய மதுரைய்ன்கண் என்க.

     (வி-ம்.) தன்பால் வந்து நீராடுகின்ற காதலர்கள் தம்முள் ஊடித் தனித்தனி நீராடுதலைப் பொறாத வையைமகள் தன் அலைக் கைகளால் மோதி அம்மகளிரை ஊடல் தீர்த்துத் தத்தம் கணவரைக் கூடும்படி செய்கின்றாள் என்பது கருத்து. ஊடி நீராடு மகளிர் பேரலை வரும்பொழுது அதற்கஞ்சித் தங்கணவரைத் தழுவிக்கொள்ளுதலை இங்ஙனம் கூறினர். தோழியின்-தோழியைப்போல. துழனி-ஆரவாரம். ஊழிக்காலத்திலும் தான் செய்த அறத்தாலே காக்கப்பட்டு நிலைத்து நின்று பின்னும் அவ்வறத்தையே பெருகும் கூடல் என்று புகழ்ந்தவாறு. தன்னை அடைந்தவர்க்குத் திருவருளும் கைகூடுதலின் அருள் நகர் என்றார். இனி அருள் அம்மையாகலின் அம்மைக்கே சிறந்துரிமையுடைய நகர் என்பார் அங்ஙனம் கூறினர் எனினுமாம்.

38-41: பெண்..........................கொன்றையன்

     (இ-ள்) பெண்உடல் பெற்ற-பெண்ணைத் தன் உடலில் ஒரு கூற்றிற் கொண்ட; பிறை சென்னியோன்-பிறை சூடிய முடியையுடையோனும்; பொன்தகடு பரப்பிய கருமணி நிரையென-பொன் தகட்டின்மேல் பரப்பப்பட்ட நீலமணியின் நிரல் என்று சொல்லும்படி; வண்டும் தேனும்-ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும்; மருள்கிளை முரற்றி-வியத்தற்குக் காரணமான பண்ணைப் பாடி; உடைந்து உமிழ் நறவு உண்டு-மலர்தலால் சொரியாநின்ற தேனைப் பருகி; உறங்கு தார் கொன்றையன்-இன்பத்துயில் கொள்ளுதற்குக் காரணமான கொன்றை மாலையை யுடையவனுமாகிய சோமசுந்தரக் கடவுளது என்க.

     (வி-ம்.) பெண்-உமை. சென்னி-முடி. பிறைச்சென்னியோன் என மாறுக. பொற்காடு-கொன்றை மலரிதழுக்கும் கருமணி அவ்விதழின்கண் மொய்க்கும் வண்டுகளுக்கும் உவமை. வண்டும் தேனும் என்புழி ஆண் பெண் வண்டுகள் என்பதுபட நின்றது. மருள்கிளை: வினைத்தொகை. முரற்றி முரற்ற என செயவென்னெச்ச மாக்கிக் காரணப் பொருட்டாக்கலுமொன்று. நறவு-தேன். பொற்றகட்டிற் பரப்பிய நீலமணி கொன்றைமலரில் மொய்த்திருக்கும் வண்டுக் கூட்டங்களுக் குவமை.