|
42-43: திருவடி..............................வனமுலை
(இ-ள்)
திருவடி புகழுநர் செல்வம் போலும்-அழகிய அடிகளைப் புகழ்ந்து பாடும் சான்றோரது செல்வம்
வளருமாறு போலே; அண்ணாந்து எடுத்த அணிஉறு வனமுலை-மேலோங்கித் தலை நிமிர்ந்த அணிகலன்கள்
மிக்க அழகுள்ள முலைகளானவை வளராநிற்கும் என்க.
(வி-ம்.)
தலைவியினுடைய கொங்கைகள் செல்வம்போல வளரும் என்க. அண்ணாத்தல்-நிமிர்தல். அணி-அணிகலன்கள்.
உறு: மிகுதிப் பொருட்டு. வனம்-அழகு.
44-45:
அவன்..................................நுசுப்பு
(இ-ள்)
மலைமுலைப்பகை அட-மலைபோன்ற முலையாகிய பகை வருத்துதலாலே; மாழ்குறும் நுசுப்பு-வருந்துதலையுடைய
அவளிடையானது; அவன் கழல் சொல்லுநர்-அக்கடவுள் திருவடியைப் புகழ்ந்து வாழ்த்துவொருடைய;
அருவினை மானும்-தீர்த்தற்கரிய வினை தேய்வது போலே தேய்ந்திருக்கும் என்க.
(வி-ம்.)
மலைமுலை: உவமைத்தொகை. அட: காரணப் பொருட்டாகிய வினையெச்சம். மாழ்கல்-வருந்துதல்.
கழல்: ஆகுபெயர்.
46-47:
மற்றவன்................................அல்குல்
(இ-ள்)
மணிப்பாம்பு அல்குல்-மணிமுற்றிய பாம்பின் படத்தையொத்த அவள் அல்குலானது; அவன்
அசைத்த மாசுணம்-அச் சோமசுந்தரக் கடவுள் அரையிற் கட்டின பாம்பானது; பரப்பி அமைத்தது
கடுக்கும்-தன் படத்தை விரித்துப் பொருத்தி வைத்தாற்போன்றிருக்கும் என்க.
(வி-ம்.)
மணிப்பாம்பு அல்குல் என்றது உவமை குறியாது வாளா அடை மாத்திரையாய் நின்றது. அசைத்தல்-கட்டல்.
மாசுணம்-பாம்பு. கடுக்கும் என்பதனை ஈண்டும் ஒட்டுக.
48-49:
இருகுழை........................கடுக்கும்
(இ-ள்)
இருகுழை கிழிக்கும்-அவளுடைய இரண்டு செவிகளையும் சென்று சென்று கிழிக்கின்ற; அரி மதர்
மலர் கண்-செவ்வரி பரந்த மதர்த்த மலர்போன்ற அவளுடைய கண்களானவை; ஆங்கு அவன்
தரித்த கலைமான் கடுக்கும்-அப்பெருமான் தன் கையின்கணேந்திய கலைமானின் கண்களை
ஒத்திருக்கும் என்க.
|