|
கடந்தது - வேண்டுவோர் வேண்டுவன நல்கும் கற்பகமரத்தை யொத்த வியப்புமிக்க நின்னுடைய இல்வாழ்க்கையினும் சிறப்புடையது; அவள் ஊரன் கொற்றம் வெண்குடை -இனி அவள் கணவனது வெற்றியையுடைய வெண்குடை நீழல்; பேராவாய்மை நின் ஊரமைனக் கடந்தது - பிறழாத வாய்மையையுடைய நின் கணவனுடைய கொள்ள வெண்குடை நிழலினும் சிறந்துது காண் என்க.
(வி-ம்.) இல்லம்-இல்வாழ்க்கை, கற்பகம் - தன்கால் வந்து வேண்டுவோர் வேண்டுவன நல்கும் அற்புதமுடைத்தாகலின் தன்னில்லத்திற்கு வந்து வேண்டுவோர் வேண்டுவன நல்கும் இல்வாழ்க்கைக்கு உவமையாக வெடுத்தாள். உவமைக்குக் கொடுத்த இவ்வடை மொழியால் அன்னவள் இல்வாழ்க்கை அவ்வறத்தின் நின்னறத்தினும் சிறப்புடைத்து என்பது கருத்தாகக் கொள்க. ஊரன்: தலைவன். குடை என்றது மன்னுயிரோம்பும் அருளாட்சியை.
14
- 19: ஏழுளைப்................................. இனியோள்
(இ-ள்) அவள் பார்த்த மதி உறவினர் - அவளைத் தஞ்சமாக நோக்கியுள்ள அறிவுடைய சுற்றத்தார்; உளைப்புரவி ஏழோடு எழும் கதிர்நோக்கிய சிறுஇலை நெருஞ்சில் பொன்பூ என்ன- பிடரி மயிரினையுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரோடு தோன்றுகின்ற ஞாயிற்றையே பார்த்திருக்கின்ற சிறிய இலைகளையுடைய நெருஞ்சிற் கொடியின் பொன்னிற மலர்கள் போன்று; நின்முகம் நோக்கிய கிளையினர் தம்மையுங் கடந்தனர் - நின்னுடைய முகத்தையே நோக்கி வாழும் நின் சுற்றத்தாரினும் காட்டில் சிறந்தோர்காண்; அன்னவட்கு இனியோள்-அத்தலைவிக்கு அன்புள்ள தோழியானவள்; உடல்நிழல் மான உனது அருள் நிற்கும் என்னையும் கடந்தனர் - உன் உடலினது நிழலைப்போன்று உனது அருள் எல்லையிலேயே நிலைபெற்ற என்னினும் காட்டில் சிறந்தவள் காண் என்க.
(வி-ம்.) பார்த்த - தஞ்சமாகப் பார்த்த. மதி - அறிவு. உளை - பிடரிமயிர். கதிர்- ஞாயிறு. நெருஞ்சிப்பூ காலை முதுல் மாலைவரை ஞாயிற்றினையே நோக்கி இருக்கும் இயல்புடையது. இதனை "செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞசிப் பொன்புனை மலரின் புகற்சிபோல: (பெருங்கதை.. 2. 4. 14-15) எனவும், " ஓங்குமலை நாடன், ஞாயி றனையனென் றோழி, நெருஞ்சி யனையவென் பெரும் பணைத்தோளே" (குறுந். 315) எனவும், "நெருஞ்சிப் பசரை வான்பூ, ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாங்கு" (புறநா 155) எனவும், "வெஞ்சுடர் நோக்கும் நெருஞ்சியில்" (இறை. சூ. 47 உரை. மேற்) எனவும் "நீள்சுடர் நெறியை நோக்கு நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல்" (சீவக461) எனவும் வரும் பிற சான்றோர் கூற்றானும் உணர்க. பொன்பூ - பொன்னிற மலர். இனியோள் என்றது உசாத்துணைத் தோழியை. இவள் செவிலி மகள். ஆகவே ஈண்டுச் செவிலி,
|