|
(வி-ம்.)
புள்ளொடு பிணங்கும் என்றமையால் முன்னின்ற புள் சேவற்புள்ளென்றும் பின்னின்ற புள்
பெடைப்புள்ளென்றும் கொள்க. சேவலோடு ஊடினமையால் பெடைப்புட்கள் தாமே இரை கவர்தல்
வேண்டின என்க. இற - இறாமீன், உணங்கல் - வற்றல், கூற்றம் - மறலி.
13-24:
விண்.....................................இறையோன்
(இ-ள்)
விண்குறித்து எழுந்து - விண்ணுலகத்தைக் குறித்து மேலெழுந்து ; மேலவர்ப் புடைத்து - ஆண்டு
வாழும் தேவர்களைத் தாக்கி ; நான்முகன் தாங்கும் தேன்உடை தாமரை நான்கு முகங்களையுடைய
பிரமனைத் தாங்காநின்ற தேனையுடைய தெய்வத்தாமரையினது ; இதழும் கொட்டையும் சிதறக்குதர்ந்து
- இதழ்களும் பொருட்டும் சிதறிப்போகும்படி அழித்து ; வானவர் இறைவன் கடவுகார் பிடித்து
- தேவர்கள் அரசனாகிய இந்திரன் நடத்துகின்ற முகில்களைப் பிடித்து ; பஞ்சு எழப்
பிழிந்து தண்புனல் பருகி - பஞ்செழும்படி பிழிந்து அவற்றின் கண்ணுள்ள குளிர்ந்த நீரைப்
பருகி ; ஐந்துஎனப் பெயரிய நெடுமரம் ஒடித்து - ஐந்தரு என்று பெயருள்ள நெடிய கற்பக மரங்களை
முறித்து ; கண் உளத்து அளவா - கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பொருந்தாத ; எள் உணவு உண்டு
- இகழப்படும் உணவை உண்டு ; தாரகைக் கணன் பொரிஎன உடல்குத்தி - விண்மீன் கூட்டங்கள்
நெற்பொரிபோலச் சிதறும்படி அவற்றின் உடலிலே குத்தி ; அடும்திறல் இனைய கொடுந்தொழில்
பெருக்கிய - கொல்லும் ஆற்றலையுடைய இவைபோன்ற கொடுந்தொழில்களைப் பெருகச்செய்த
; மாயா வரத்த பெருங்குருகு அடித்து- அழியாத வரத்தினையுடைய பெரிய குருகாகிய அசுரனைக்
கொன்று ; வெள்சிறை முடித்த - அக்குருகினது வெள்ளிய சிறகினைச் சூடிய ; செஞ்சடைப்
பெருமான் கூடற்கு இறையோன் - சிவந்த சடைசேர் கடவுளாகிய மதுரைப் பெருமானது என்க.
(வி-ம்.)
தேவர்களைத் தாக்கித் தாமரையை அழித்து மேகத்தைப் பிழிந்து மரம் ஒடித்து எள்ளுணவு
உண்டு விண்மீன்களைக் குத்தி இங்ஙனம் அழிக்கும் திறலாகிய கொடுந்தொழிலையுடையவனும்
கொக்குவடிவமாகியவனும் ஆகிய அசுரன் என்க. மேலவர் - தேவர், கொட்டை - பொருட்டு,
குதர்தல் - அழித்தல், வானவர் இறைவன் - தேவர்க்கு அரசன் ஐந்தாகிய கற்பகத்தருக்களுக்கு
எண்ணால் வரு பெயர். ஆதலின் ஐந்தெனப் பெயரிய என்றார். கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
பொரந்தாத உணவு, எள்ளுணவு, எனத் தனித்தனி கூட்டுக, எள்ளுணவு- சான்றோரால் இகழப்படும்
உணவு. அஃதாவது ஊனுணவு. தாரகை - விண் மீன், அக்கொக்கினது வெள்சிறை என்க. குருகு -
கொக்கு, கொக்காகி உலகினை அழித்துவந்த அசுரன் ஒருவனைக்கொன்று இறைவன் அவ்வசுரக்
கொக்கினது இறகினைச் சடையில் சூடினான் என்பது வரலாறு.
|