பக்கம் எண் :

மூலமும் உரையும்505



7 - 13 : கொலைஞர்.................................காண்க.

     (இ-ள்) கொலைஞர் பொலிந்த கொடித்தோர்க்கு அணங்கினை - நீ இதுகாறும் மறவர் ஏறிவந்த கொடியுயையுடைய தேர்களைக் கண்டு அஞ்சி வருத்தமுற்றனை இனி ; வேதியர் நிதி மிக விதிமகம் முற்றி - மறையோர் உலகின்கண் செல்வம் பெருகும் பொருட்டு விதிகளையுடைய கேள்விகளைச் செய்துமுடித்து ; அவ்விரதம் துறையாடுதல் கெழுமி-அந்த நோன்பின் பொருட்டு நீராடுதலைச் செய்து ; பொன்உருள் வையம் போவது காண்க-பொன்னாலியன்ற உருள்களையுடைய தேரில் ஏறிச் செல்வதனைக் கண்டு மகிழ்வாயாக ; ஆறுஅலை எயினர் அமர்கலிக்கு அழுங்கினை - நீ இதுகாறும் வழிபறிப்போராகிய எயினரது போரொலிக்கு அஞ்சினை வருந்தினை ; பணைத்துஎழு சாலி நெருங்குபு புகுந்து- இனி நீ அடி பருத்து வளர்ந்த நெற்பயிர்களினூடே நெருங்கிப்புகுந்து ; கழுநீர் கலைஞர் கம்பலை காண்க - செங்கழுநீராகிய களைகளைப் பறிக்கும் உழத்தியருடைய ஆரவாரத்தைக் காண்பாயாக என்க.

     (வி-ம்.) கொலைஞர் - ஈண்டு எயினர். அணங்குதல் - வருந்துதல், வேதியர் வேள்வி செய்தலால் உலகில் வளம் பெருகும் என்பது பற்றி வேதியர் நிதிமிக மகம் முற்றி என்றார். நிதி - செல்வம், “கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே செற்றார் ” எனப் பிற சான்றோரும் ஒதுதலுணர்க மகம் - வேள்வி முற்றுதல் செய்துமுடித்தல். துறையாடுதல் - நீராடுதல் கெழுமி - பொருந்தி. வையம் - தேர், வண்டியுமாம். ஆறலை எயினர் - வழிபறிக்கும் பாலைநிலமாக்கள், அமர்க்கலி- போரொலி சாலி - நெற்பயிர், கழுநீர் - செங்கழுநீர், கலைஞர் - களைபறிப்போர், கம்பலை - ஆரவாரம்.

14-22: தழல்.................................கேண்மதி

     (இ-ள்) தழல் தலை பழுத்தபால் முரம்பு அடுத்தனை - நீ இதுகாறும் தீப்பிழம்பு தம்மிடத்தே கனிந்துள்ள பருக்கைக் கற்களையுடைய மேட்டு நிலத்தின்மேல் நடந்துவந்தனை, இனி ; சுரி முகம் குழுவளை நிலவு எழச் சொரிந்த -சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் நிலவொளி தவழும்படி ஈன்ற ; குளிர் வெள் தரளம் குவால் இவை காண்க - குளிர்ந்த வெண்முத்துக் குவியலாகிய இவற்றைக் கண்டு மகிழ்வாயாக ; அலகை நெடு இரதம் புனல் எனக் காட்டினை - நீ பாலையின்கண் பேய்த்தேராகிய நெடிய கானலைக் கண்டு மயங்கி உதோ காண்ிமின் நீர்நிலையை என்று எனக்குக் காட்டா நின்றனை ; வல்மீன் நெடகயல் பொதுவினை அகத்துக்கிடங்கு எனப் பெயரிய கருங்கடல் காண்க - ஈண்டு முதலையும் நெடிய கயல்மீனும் பொதுவாகத் தொழில் கூறப்பட்ட கரிய கடலைக் கண்டு மகிழ்வாயாக; காகளம் பூசல் துடி ஒலி ஏற்றனை. நீ இதுகாறுங் காகள வோசையையும் போர்ப்பறை முழக்கினையும்