பக்கம் எண் :

மூலமும் உரையும்583



ஆயிரம் நரம்புகள் நிறைவுறச் சமனாக இறுக்கப்பட்டு; கோடி மூன்றில் குறித்துமணி குயிற்றி-மூன்று மூலையாகச் செய்து மணிகள் பதித்து; இரு நிலம் கிடத்தி-பெரிய பூமியிலே வைத்து; மனம் கரம் கதுவ-நெஞ்சும் கையும் விடாது பற்ற என்க.

     (வி-ம்.) முப்பத்திரண்டு விரல் அளவு அகலமும் எண்பத்து நான்கு விரல் அளவு நீளமும் உடையதாய் அழகுடையதாய் முக்கோண வடிவுடையதாய்ச் செய்து ஆயிரம் நரம்பு கட்டி மணிகள் பதித்து அழகு செய்து நிலத்தின்மேல் வைத்து விரலால் வருடி என்பது கருத்து. அங்குலி- விரலளவு. குறுமை-அகலம். நெடுமை-நீளம். ஐது-அழகுடையது. தந்திரி-நரம்பு. விசித்தல்-இறுக்குதல். குயிற்றுதல்-பதித்தல். நெஞ்சால் நினைந்து விரலால் வருடுதலின் மனங்கரங்கதுவ என்றார்.

8 - 11: ஆயிரத்து........................புலம்ப

     (இ-ள்) பிறவிப் பேதம் துறையது போல-பிறப்பின் வேறுபாட்டின் வகை போல; ஆயிரத்து எட்டில் அமைந்தன பிறப்பு ஆரிய பதங்கொள் நாரதம் பேர்யாழ் - ஆயிரத்தெட்டு வகையாக அமைந்தனவாகிய சிறப்பினையுடைய ஒலிகளமைந்த வடசொற்களைக் கொண்டிருக்கின்ற நாரதம் என்னும் பேரியாழ்; நன்னர் கொள் அன்பால் நனிமுகம் புலம்ப-நலங்கொண்டுள்ள அன்புடனே மிகுதியும் வாயாற் பாடவும் என்க.

     (வி-ம்.) ஒலியின் பிறப்பு வேறுபாட்டிற்கு உயிர்களின் பிறப்பு வேறுபாடுகள் உவமை. பிறவிப்பேதத்துறை-பிறவி வேற்றுமை வகைகள் என்க. ஆயிரத்து எட்டு வகைப் பிறப்புடைய ஒலிகள் என்க. அவ்வொலிகள் வடசொல்லால் அமைக்கப்பட்டிருத்தலின் ஆரிய பதங்கொள் என்றார். இனி இதனைப் பேரியாழ் என்றும் கூறுப. இப்பேரியாழைப்பற்றிச் சிலப்பதிகாரத்தின்கண் அடியார்க்கு நல்லார் கூறுகின்ற விளக்கம் வருமாறு: “பெருங்கலமாவது-பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிரு சாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிரு சாணும், இப்பெற்றிக் கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்து இயல்வது; என்னை! ‘ஆயிர நரம்பிற் றாதியா ழாகும், ஏனை யுறுப்பு மொப்பன கொளலே, பத்தர தளவுங் கோட்டின தளவும், ஒத்த வென்ப விருமூன் றிரட்டி, வணர்சாணொழித்தென வைத்தனர் புலவர் என நூலுள்ளும், ‘தலமுத லூழியிற் றானவர் தருக்கறப், புலமக ளாளர் புரிநரப் பாயிரம், வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்ச் செலவு முறை யெல்லாஞ் செய்கையிற் றெரிந்து, மற்றை யாழும் கற்றுமுறை பிழையான்’ எனக் கதையினுள்ளும் கூறினாராகலான்; பேரியாழ் முதலிய ஏனவும் இறந்தன வெனக் கொள்க.” (சிலப். உரைப்பாயிரம்) நாரதனால் செய்யப்பட்டதாகலின் இது நாரதம் என்னும் பெயர் பெறுவதாயிற்று. நாரதம் என்னும் பேரியாழ் என்க. இறையன்பு என்பது தோன்ற நன்னர் கொள் அன்பு என்றார். முகம் என்றது யாழ் நரம்பினை. புலம்புதல்-இசைத்தல்.