பக்கம் எண் :

584கல்லாடம்[செய்யுள்82]



12 - 18: முந்நான்கு....................கருவியும்

     (இ-ள்) முந்நான்கு அங்குலி முழுவுடல் சுற்றும்-பன்னிரண்டு விரலளவாகிய முழுவுடல் சுற்றமைந்த குறுக்கமும்; ஐம்பதிற்று இரட்டி ஆறுடன் கழித்த அங்குலி நெடுமையும் அமைத்து-தொண்ணூற்று நான்கு விரலளவு நெடுமையுமாக அமைத்து; உள் தூர்த்து-உள் அடைத்து; ஒன்பது தந்திரி உறுத்தி-ஒன்பது நரம்புகளைப் பொருத்தி; நிலை நீக்கி-நிலைகளை நீக்கம் செய்து; அறுவாய்க்கு-வரையறுத்த நிலையில்; அ இரண்டு அணைத்து- இவ்விரண்டாகச் சேர்த்து; கால் தோள் வைத்து-காலிலும் தோளிலும் பொருந்த வைத்து; தொழில்பட-நரம்புகளை வருடுதலாலே; தோன்றும் தும்புரு கருவியும்-இசை தோன்றுகின்ற தும்புரு என்னும் யாழும் என்க.

     (வி-ம்.) தும்புரு யாழ் பன்னிரண்டு விரல் சுற்றளவுள்ளதும் தொண்ணூற்று நான்கு விரல் அளவு நீளமும் உடையதாய்ச் செய்து ஒன்பது நரம்புகள் கட்டப்பட்ட தென்பதும் அவற்றுள் சுதி நரம்பு தனித்திருப்ப ஏனைய எட்டு நரம்புகளும் இரண்டிரண்டாக இணைத்துக் கட்டப்பட்டிருக்கு மென்பதும் இதனை இயக்குங்கால் பதுமாசனத்திலிருந்து தொடையிலும் தோளிலும் பொருந்தவைத்து இயக்கப்படும் என்பது முணர்க. நிலை என்றது சுதி நரம்பினை. இந்த யாழிற்குத் தும்புரு யாழ் என்பது பெயர் என்க. கருவி-யாழ்.

18 - 21: துன்னி................முரல

     (இ-ள்) துன்னி நின்று இசைப்ப-முன்கூறப்பட்ட நாரதயாழோடு பொருந்தி நின்று பாடவும்; எழுஎன உடம்பு பெற்று-வயிரமான உடல் பெற்று; எண்பது அங்குலியின்-எண்பது விரலளவு நீட்சியுடனே; நூறு தந்திரி தழங்கிய முகத்த- நூறு நரம்புகள் கட்டப்பெற்று இசைக்கின்ற முகத்தினையுடைய; கீசகம் பேரியாழ் கிளையுடன் முரல-கீசகம் என்னும் பெயரினையுடைய யாழ் பண்ணோடு பாடாநிற்பவும் என்க.

     (வி-ம்.) துன்னுதல்-பொருந்துதல். கீசகயாழ் வயிரமான உடல் பெற்று என்பது விரலளவு நீளமுடைத்தாய் நூறு நரம்புகளுடையதாய் அமைந்திருக்கும் என்க. கிளை-பண். முரலுதல்-பாடுதல்.

22 - 29: நிறைமதி......................இசைப்ப

     (இ-ள்) நிறைமதி வட்டத்து-முழுத்திங்கள் போன்ற வட்டவடிவ முடையதாய்; முயல் உரி விசித்து-முயலின் தோலால் கட்டி; நாப்பண் ஒற்றை நரம்பு கடிப்பமைத்து-நடு