|
36 - 41: அரவம்........................உண்ணும்
(இ-ள்)
அரவப் பசுந்தலை அரும்பு அவிழ் கணைக்கால் நெய்தல் பாசடை-பாம்பினது பசிய தலையினை
யொத்த அரும்புகள் மலரப்பெற்ற திரண்ட தண்டினையுடைய அல்லியினது பசிய இலைகளாகிய;
நெடுங்காடு ஒளிக்கும்-நெடிய காட்டிலே மறைகின்ற; கண் எனக் குறித்த கருங்கயல் கணத்தை-மாதர்
கண்ணென்று புலவர்களால் கூறப்பட்ட பெரிய சேல் மீன்களை; வெள் உடல் கூர்வாய் செந்தாள்
குருகு இனம்-வெள்ளிய உடலையும் கூர்த்த அலகினையும் சிவந்த காலினையுமுடைய நாரைக் கூட்டங்கள்;
அரவு எயிறு அணைத்த முள் இலை முடக்கைதைகள்-பாம்பின் பல்லைப்போற் பொருந்திய முள்ளையுடைய
மடலையுடைய வளைந்த தாழைகளினிடத்தே; கான்று அலர்கடிமலர் கரந்து உறைந்து உண்ணும்-மணம்
பரப்பி மலருகின்ற மலர்களோடு மலர்களாய் மறைந்திருந்து கொத்தி உண்ணுகின்ற என்க.
(வி-ம்.)
பாம்பின் தலை அல்லி அரும்பிற்குவமை. கணைக்கால்-திரண்ட தண்டு. புலவர், மாதர்கண்
என்று உவமையாக எடுத்துக் கூறும் சேல் மீன் என்க. கூர்வாய்-கூரிய அலகு. பாம்பின் பல்
தாழை முள்ளிற்குவமை. கைதை-தாழை. நாரைகள் வெண்டாழை மலர்களோடே மலர் போலத் தோன்றும்படி
இருந்து சேல் மீன்களைச் செவ்வி நோக்கிக் கொத்தித் தின்னும் என்றவாறு. வெண்டாழை
மலர் நாரை போறலின் கரந்துறைதற்கு ஏதுவாயிற்று.
42 - 46: கருங்கழி...............................நெஞ்சம்
(இ-ள்)
கருங்கழி கிடந்த கானலங்கரைவாய்-பெரிய கழி சூழ்ந்து கிடந்த கடற்கரையில்; மெய்படு
கடும் சூள் மின் எனத் துறந்தவர்-வாய்மையாதற்குரிய பெரிய சூள்மொழியை மின்னல் போல
விரைவில் மறந்து விட்டவரது; சுவல் உளை கவனம் புள் இயல் கலிமா-பிடரி மயிரினையும்
விரைந்து செல்லுதலில் பறக்கும் பறவையின் இயல்பினையுமுடைய கனைக்கின்ற குதிரைகள்
பூட்டப்பட்ட; நோக்கம் மறைத்த பரிதிகொள் நெடுந்தேர்-பார்க்கின்ற கண்களை ஒளியால்
மறைக்கின்ற உருளையையுடைய பெரிய தேரின்; பின்னொடு சென்ற என் பெரும் பீழை நெஞ்சம்-பின்னாற்
சென்ற என்னுடைய பெருந்துன்பமுடைய மனம் என்க.
(வி-ம்.)
கழி-நெய்தனில நீரோடை. கானல்-கடற்கரைச் சோலை. மெய்யாதற்குரிய சூள் என்க. மிகவும்
விரைந்து மறந்தார் என்பாள் மின் எனத் துறந்தவர் என்றாள். கவனம்-விரைவு. விரைவினால்
புள்ளியலுடைய மான் என்க. புள்ளியல்-பறக்கும் பறவை போல விரைந்து செல்லுதல். உள்ளம்
போல உற்றுழி யுதவும்
|