பக்கம் எண் :

620கல்லாடம்[செய்யுள்87]



கண் எழுதிய கோலாகிய கரும்புருவத்தைக் கரைத்தும்; நூல் வளர்த்த கோதைவகை பரிந்தும்-நாரால் நீளக்கட்டிய மலர்மாலை வகைகளை அறுத்தும்; மணிக்கலன் கொண்டு-அவளணிந்த மணியணிகலன்களைக் கழற்றியும்; கழைத்தோள் நெகிழ தழைஉடல் குழைய திரை எதிர் தள்ளி-அவளுடைய மூங்கில் போன்ற தோள் நெகிழவும் பூரித்த உடல் குழையவும் அவளை அலையின் எதிராகத் தள்ளியும்; மலர்த்துகில் கன் புதைத்து-பூந்துகிலாலே அவள் கண்ணை மூடியும்; ஒள்நிற வேங்கையின்தாதும் பொன்னும் சுண்ணமும் கலந்து உடல் திமிர்ந்து ஊற்றி-நன்னிறமுள்ள வேங்கைமலரின் துகளையும் பொற்றுகளையும் நறுமணப்பொடியையும் கலந்து அவள் உடலிற் பூசியும் பெய்து என்க.

     (வி-ம்.) மணிக்கலன்-மணியிழைக்கப்பட்ட அணிகலன்கள். கழை-மூங்கில். இங்ஙனம் நீ விளையாடுதலாலே புரித்த அவள் உடல் குழைய என்பாள் தழையுடல் குழைய என்றாள். மலர்த்துகில்-மலர்வடிவம் பொறித்த துகில். தாது-பூந்துகள். பொன்-ஈண்டுப் பொற்சுண்ணம். சுண்ணம் என்றது நறுமணப்பொடியை. திமிர்தல்-பூசுதல். ஊற்றுதல்-பெய்தல்.

15 - 18: வண்டொடு....................நீயே

     (இ-ள்) வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டு அலர் சூட்டி-வண்டுகளோடு சிரித்து மலருகின்ற இதழ்களையுடைய மலர் மாலையை அவளுக்குச் சூட்டியும்; இறால்புணர் புதுத்தேன் ஈத்து-இறாட்டிற் பொருந்திய புதிய தேனைப் பருகும்படி அவளுக்கு வழங்கியும்; உடன் புணரும் வையையில்-அவளொடே கூடுதற்கிடமான வையையாற்றிலே; மறித்தும்-மீண்டும்; கெழுமிய விழவுள்-பொருந்திய அந்நீர்விழாவின்கண்; அன்னவள் தன்னுடன் நீ புகுமதி-அப்பரத்தையோடே நீ செல்வாயாக என்க.

     (வி-ம்.) மகிழ்ந்தவிழ்தல்-சிரிப்பதுபோல மலர்தல். இறால்-இறாட்டு (தேனடை) புணரும் வையை-புணர்தற்கிடனான வையை. கெழுமுதல்-பொருந்துதல். விழவு-நீராட்டுவிழா. அன்னவள்-அப்பரத்தை. ஏகாரம்: ஈற்றசை. மதி: முன்னிலையசை.

41 - 42: எம்மில்லம்..............................அன்றே

     (இ-ள்) எம்மில்லம் அரும்புனல் வையைப் புதுநீர் அன்று-எம்முடைய எளிய இவ்வில்லம் பெறுதற்கரிய வெள்ளத்தையுடைய அவ்வையையாறு போலப் புதிய தன்மை யுடையதன்று என்க.