பக்கம் எண் :

670கல்லாடம்[செய்யுள்96]



தாற் போன்ற; கறையடி சென்னியில் நகநுதி போக்கி-யானையினது மத்தகத்தில் தனது நகத்தின் நுனியை ஊன்றிப் பிளந்து; குருத்து அயில் பேழ்வாய் பல்படை சீயம்-மூளையைப் பருகுகின்ற பெரிய வாயையும் பல்லாகிய படைக்கலத்தையு முடைய சிங்கங்கள்; அதர்தொறும் குழுவும்-இனி நீயிர் செல்லும் வழிகள்தொறும் நும்மை நெருங்குவனவாம்; அவற்றினும்-அச்சிங்கங்களினுங்காட்டில் கொடியோராய்; மற்றவன் கடுங்கால் கொற்றத்து அடும் தூதுவர் என-அக்கூற்றுவனது கடிய நடையையும் வெற்றியையுமுடைய கொல்கின்ற தூதுவர் போல; தனிபார்த்து உழலும் கிராதரும் பலர்-தனியே ஆறு செல்வோர் வரவினை எதிர்பார்த்துத் திரிகின்ற வேடரும் பலராவார் என்க.

     (வி-ம்.) தென்றிசைக் கோமகன்-கூற்றுவன். பகடு-எருமைக்கடா. இது யானைக்குவமை. கறையடி-யானை. நுதி-நுனி. அயிலுதல்-உண்ணுதல். பல்லாகிய படைக்கலன் என்க. அதர்-வழி. மற்றவன்-மேலே கூறிய கூற்றுவன். கடுங்கால்-விரைந்து நடக்குங் கால். கொற்றம் வெற்றி. அடுந்தூதுவர்: வினைத்தொகை. அடுதல்-கொல்லுதல். தனி-தனிமை. உழலுதல்-திரிதல். கிராதர்-வேடர். வேடர் சிங்கங்களினும் பலர் என்றவாறு.

9 - 16: ஒருகால்.....................................ஐய

     (இ-ள்) ஒருகால் இரதத்து எழுபரி பூட்டி இருவான் போகிய எரிசுடர்க்கடவுள்- ஒற்றையாழித்தேரில் ஏழு குதிரைகளைப் பூட்டி ஊர்ந்து பெரிய வானத்திலே செல்லுகின்ற கதிரவன்; மாதவராம் என-சிறந்த துறவிகளைப்போலத் தன்னிற்றானாயடங்கி; மேல்மலை அறைந்தனன்-மேற்றிசை மலையில் ஒளித்தான் ஆதலின்; அன்பினர்க்கு அருளும் கூடல்பதி வரும் ஆடல்பரியோன்-மெய்யன்பராகிய மணிவாசகருக்கு அருள் செய்தற்கிடமாகிய மதுரை நகரத் தெழுந்தருளி வந்த வெற்றியுள்ள மறைப்புரவையையுடைய இறைவனும்; எட்டு எட்டு இயற்றிய கட்டு அமர்ச்சடையோன்-அறுபத்து நான்கு திருவிளையாடல் செய்தருளிய சுற்றப்பட்ட சடையையுடையவனுமாகிய சிவபெருமானுடைய; இருசரண் அடைந்த தூயோர்போல அருளுடன் தமியை ஐய வாடினை-இரண்டு திருவடியையும் புகலாய் அடைந்த தூயோர்போல அருளோடே தமியையாய் ஐயனே! நீயும் வருந்தியுள்ளாய் என்க.

     (வி-ம்.) ஒருகால்-ஓர் உருளை. இருவான்-பெரிய வானம். எரிசுடர்க்கடவுள்-கதிரவங் எரிகின்ற சுடர்களுக்கெல்லாம் முதல்வனாகலின் அங்ஙனம் கூறினர். மாதவர்-சிறந்த துறவோர். துறவோர் தன்மனத்தைப் புலன்களிற் செல்லாமல் தடுத்துத் தம்முள்ளே தாமாய்