பக்கம் எண் :

மூலமும் உரையும்671



அடங்குதலின் விண்ணிற்பரவிய கதிர்களைச் சுருக்கித் தன்னிலேதானாய் அடங்கும் கதிரவனுக்கு உவமை கூறினார். அன்பினர்க்கு வரும் ஆடல் பரியோன் என்றதனால் அன்பினர் மணிவாசகப் பெருமான் என்பது பெற்றாம். எட்டெட்டு-அறுபத்துநான்கு திருவிளையாடல். மறு: காமவெகுளி மயக்கம். அடியார் அருளுடனே தனித்தல்போல அருளுடன் தமியை என்றார். அணங்கு இடைந்தனள்; அவளேயன்றி நீயும் வாடினை என்பது கருத்து.

17 - 22: தண்ணீர்............................................அயின்று

     (இ-ள்) தண்ணீர் வாய்தரும் செந்நிறச் சிதலை அதவு உதிர் அரிசி அன்ன-குளிர்ந்த நீரினை உமிழ்கின்ற செவந்த நிறமுடைய செல்லினையும் அத்திக்கனியினின்றும் உதிருகின்ற வித்தினையும் ஒத்த; செந்தினை நுண்பதம்-சிவந்த தினையால் ஆக்கிய சோறும்; தண்தேன்-குளிர்ந்த தேனும்; விளங்கனி-விளாம்பழமும்; முயல்தசை-முயலிறைச்சியும்; வெறிக்கண் கவையடி கடுங்கால் மேதி-வெறித்த கண்கலையும் பிளவுபட்ட குளம்பினையும் கடிய நடையினையுடைய காலையுமுடைய காட்டெருமைகள்; அன்பு மகப்பிழைத்து கல்லறை பொழிந்த வறட்பால்-தமக்கு இனிய கன்றுகளைக் காணாமையால் கற்பாறைகளின் மேலே சொரிந்த உலர்ந்த பாற்கட்டியும் ஆகிய; எம்உழை உளஇன அயின்று-எம்பால் உள்ள இவ்வுணவுகளை உண்டு என்க.

     (வி-ம்.) செல் தன்வாய்நீரை உமிழ்ந்தே மண்ணைப்பதம் செய்து புற்றெடுத்தல் இயல்பு. இதனால் கரையான் தன்வாய்நீரைக் கொண்டே பிழைக்கும் என்னும் பழமொழி வழங்குவதாயிற்று. சிதலை, செல், கரையான் என்பன ஒருபொருட்கிளவி. அதவு-அத்திக்கனி: ஆகுபெயர். அரிசி என்றது அத்தீவிதையினை சிதலையும் அத்திவிதையும் தினைச் சோற்றிற்குவமை. மேதி-எருமை. மக-ஈண்டுக் கன்று. கல்லறை-கற்பாறை. வறட்பால்-உலர்ந்த பாற்கட்டி. அயிலுதல்-உண்ணுதல்.

23 - 28: கார்........................கடனே

     (இ-ள்) கார் உடல் அனுங்கிய பைங்கண் கறையடி-கரிய முகிலைத் தன்நிறத்தால் தோற்கச் செய்த பசிய கண்ணையுடைய யானை; சென்னி தூங்கி நின்றது காட்டும்-தலையைத் தொங்கவிட்டு நின்ற தன்மையைக் காட்டுகின்ற; நெடுமரை அதள் வேய் சில்இடக் குரம்பையில்-நெடிய மானினுடைய தோல்களாலே மேற்கூரை வேயப்பட்ட சிறிய இடத்தையுடைய எம் குடிலில்; மற்று அதன் தோலில்-அம்மானின் தோலாகிய பாயலிலே; இருவீரும் உற்று-நீவிர் இருவீரும் இருந்து;