பக்கம் எண் :

மூலமும் உரையும்681



48 - 49: அமுதவாய்...................அல்லள்

     (இ-ள்) அமுதவாய் கடுவிழி குறுந்தொடிநெடுங் குழல்-அமிழ்தம் போன்ற இன்னொழி யியம்பும் வாயினையும், நஞ்சு போன்று காண்போரை நலிகின்ற கண்களையும் குறிய வளையல்களையும் நெடிய கூந்தலையும்; பெருந்தோள் சிறுநகை-பெரிய தோள்கலையும் புன்முறுவலையும் உடைய என் மகள்; முன்னையள் அல்லள்-இற்றைநாள் பண்டிருதாற்போல இருந்திலள்; பெரிதும் வேறுபட்டிருக்கின்றாள் என்க.

     (வி-ம்.) முன்னையள்-பண்டு இருந்தவள். அமுதம் போன்ற இன்மொழியையுடைய வாய் என்றவாறு. கடு-நஞ்சு. கண்டார் நெஞ்சு கலக்குதலின் கடுவிழி என்றாள். அமுதவாய்க் அடு விழி என்புழியும், குறுந்தொடி நெடுங்குழல் என்புழியும், பெருந்தோள் சிறுநகை என்புழியும் முரணணி தோன்றிச் செய்யுளின்ப மிகுதலை உணர்க.

50 - 53: உலகியல்.........................புக்கன

     (இ-ள்) உலகு இயல் மறந்த கதியினர்போல - இப்பொய்யாய உலகவொழுக்கத்தைத் துறந்து மறந்துவிட்ட துறவுநெறிச் செலவினையுடைய பெரியோர் தஞ் சுற்றத்தாரை நோக்கும் நோக்கம்போல; நம்முள் பார்வையும் வேறுவேறு ஆயின-இவள் நம்மை நோக்கும் நோக்கங்களும் வேறு வேறு குறிப்புடையன ஆயின; பகழி செய் கம்மியர் உள்ளம்போல-கணை வடிக்கும் கம்மாளர் உள்ளம் பிறவற்றை நினையாமல் அக்கணையொன்றனையே நினைக்குமாறுபோலே, ஐம்புலக் கேளிரும் ஒருவாய்ப் புக்கன-கேளிர்போன்ற இவளுடைய அஒம்பொறிகளும் தத்தமக்குரிய புலன்களிற் செல்லாமல் ஒருவழியே செல்வனவாயின என்க.

     (வி-ம்.) உலகியல் மறந்த கதியினர் என்றது துரவரத் துறந்த மேலோரை; அவர் எவ்வுயிரையும் பொதுவானோக்குதலன்றி இவர் உறவினர் இவர் நண்பர் இவர் நொதுமலர் எனக் குறித்து நோக்காமைபோல இவளும் உறவினேமாகிய எம்மையும் பற்றின்றிப் பொதுவின் நோக்குகின்றாள் என்பது கருத்து. பகழி-கணை. இவள் எல்லாவற்றையும் விடுத்து யாதோ ஒன்றனை மட்டுமே நினைக்கின்றாள் என்பாள் பகழி செய் கம்மியர் உள்ளம்போல ஐம்புலக் கேளிரும் ஒருவாய்ப் புக்கன என்றாள். கேளிர் ஐம்புலமும் எனப் பயனிலைக்கேற்ப மாறுக. புலம் என்றது ஈண்டுப் பொறிகளை. இவள் பொறிகள் ஒருவாய்ப்புக்கன என்றது இவள் பண்டுபோல நோக்கின்றிலள் கேட்கின்றிலள் உண்கிலள் பயின்றிலள் துயின்றிலள் உற்றிலள் உயிர்த்திலள் அனைத்தினும் வேறுபட்டிருக்கின்றனள் என்றவாறு.