பக்கம் எண் :

82கல்லாடம்[செய்யுள்8]



5-7: பசுங்கடல்...........................கொடியோன்

     (இ-ள்) பசுங் கடல் கண்டு-பசிய அக் கடலிடத்தே அவனைக் கண்டு; மாவொடுங் கொன்ற-அவன் மறைதற்கிடமான மாமரத்தோடே கொன்ற; மணி நெடுந் திருவேல் சேவலங் கொடியோன்-வீரமணி கட்டிய நெடிய அழகிய வேலினையும் கோழிச் சேவற் கொடியினையும் உடையோனாகிய முருகப்பெருமான் என்க.

     (வி-ம்.) பசுங்கடல் கண்டு என்றது அம் மலைகளிலே காணாமல் பசிய கடலிடத்துக் கண்டு என்பதுபட நின்றது. சூரன் மாவானதன்றி அம்மாவே தனக்கு அரணுமாக நிற்றலின் மாவொடுங்கொன்ற என்றார். “சூருடை மாமுதல் தடிந்த” எனப் பிறரும் கூறுதலுணர்க. மாவொடும் என்புழி உம்மை இசை நிறை. சூரன் என்னும் பெயர் ஒப்புமை பற்றிக் கொன்ற என்றார். மணி-வீரமணி.

7-9: காவல்.................................மிடற்றோன்

     (இ-ள்) காவல் கொண்டு இருந்த-காப்பாகக்கொண்டு எழுந்தருளியுள்ள; குன்றம் உடுத்த கூடல் அம்பதி இறை-திருப்பரங்குன்றத்தை அணிந்த அழகிய மதுரை நகரத்தில் வாழும் இறைவனாகிய; தொடர்ந்து உயிர் வவ்விய விடம் கெழுமிடற்றோன்-தொடர்ந்து உயிர்களைக் கைக்கொள்ளும் நஞ்சு பொருந்திய மிடற்றினையுடைய சிவபெருமான் என்க.

     (வி-ம்.) குன்றம்-திருப்பரங்குன்றம். பதியுறை என்றும் பாடம். இதற்குப் பதியில் உறைகின்ற என்க. மிடறு-கழுத்து.

10-12: புண்ணியம்.................................கறங்க

     (இ-ள்) புண்ணியம் தழைத்த முன்னோர் நாளில்-சிவபுண்ணியம் மிக்க மந்திரியாகிய வியாழனுக்குரிய பூசை நாளிலே; இருவிரல் புரிவொடு நிமிர்ந்து-பெரிய விரலினைத் தொழிலோடு நிமிர்த்தி; சேர்த்து குழை உடல் விரிதலை-புடைத்தற்குக் காரணமான குழையா நின்ற உடலினையும் பரந்த தலையினையுமுடைய; கைத்திரி கறங்க-இடக்கை என்னும் இசைக்கருவி முழங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) புண்ணியம்-சிவபுண்ணியம், முன்னோர்-மந்திரி: அது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. மந்திரி நாளெனவே வியாழநாளாய் பூசமாயிற்று. இனி முன்னோர் நாளில் என்பதற்கு முன்னொரு காலத்திலே எனினும் ஆம். சேர்த்து உடல் குழையுடல் எனத் தனித்தனி கூட்டுக. சேர்த்து உடல்: வினைத்தொகை. குழை உடலுமது. சேர்த்துதல்-புடைத்தல். இருவிரல்-பெரியவிரல். இனி இரண்டு விரல் எனினுமாம். இருவிரலால் புடைக்கும் கைத்திரி என்றவாறு. கைத்திரி-இடக்கை. கறங்க-முழங்க.