|
செய்கின்ற நீரை வழங்குதலால்;
மறையோன் ஆகியும்-அந்தணனை ஒத்தும் என்க.
(வி-ம்.) மூன்றழல-காருகபத்தியம்,
தென்றிசையங்கி, ஆகவநீயம் என்பன. நான்மறை-தைத்திரியம், பௌடிகம், தலவகாரம்,
சாமவேதம் என்பன. இனி இருக்கும் யசுவம், சாமமும், அதர்வணமும் எனினுமாம், தோய்ந்து
என்னும் செய்தென் எச்சத்தைத் தோய எனச் செயவென் எச்சமாகக் கொள்க. மறைநீர்
என்புழி மறையோ திவிடும் நீர் என்றும் பொருள்களை மறைக்கும் வெள்ளம் என்றும் ஏற்றபெற்றி
கொள்க. யாற்றுக்கு மூன்றுஅழல் அதன் மருங்கில் வேள்வி செய்தலால் கொள்க. மறையோன்-அந்தணன்.
11-13
மீனும்....................ஆகியும்
(இ-ள்) மீனும் கொடியும்
விரி திணை ஐந்தும் தேன் உறைதமிழும்-மீன்களும் கொடிகளும் குறிஞ்சி முதலாக விரிந்த
நிலமைந்தும் தேன்போன்ற இனிமை உறைகின்ற தமிழ் மொழியும்; திருஉறை கூடலும் மணத்தலின்-செல்வம்
தங்குதற்கிடனாகிய மதுரைமா நகரும் பொருந்துதலாலே; மதிக்குல மன்னவன் ஆகியும்-திங்கட்
குலத்திற் றோன்றிய பாண்டிய மன்னனை ஒத்தும் என்க.
(வி-ம்.) வையைக்கு
மீனும் கொடியும் என்புழி கொடி தாமரை முதலியவற்றின் கொடி என்றும், பாண்டியனுக்குக்
கொள்ளுங்கால் மீன் இலச்சினையும் மீனக்கொடியும் என்றும் கொள்க. ஐந்து திணை-குறிஞ்சி,
முல்லை, பாலை, மரும், நெய்தல் என்பன. தேன்-இனிமை. தமிழ் நாட்டின் கண்ணதாகலின்
வையை யாற்றிற்குத் தமிழும் உரிமையுடைத்தாயிற்று. மதிக்குலமன்னனவன்-பாண்டியன்:
14-15;
நவமணி........................ஆகியும்
(இ-ள்)
நவமணி எடுத்து நல்புலம் காட்டலின்-ஒன்பது வகை மணிகளையும் அவை தோன்றுமிடங்களினின்றும்
எடுத்துக் கொணர்ந்து நல்ல நாட்டின்கண் உள்ளார்க்குக் காட்டுதலாலே; வளர்குறி மயங்கா
வணிகன் ஆகியும்-அந்நவமணிகளின் இலக்கணத்தை அறிதலின்கண் மயங்காத வணிகனை ஒத்தும்
என்க.
(வி-ம்.) நவமணி-ஒன்பதுவகை
மணி, யாறு குறிஞ்சி நிலத்தினின்றும் மணிகளை வரன்றிக் கொடுவருதலும், வணிகன் அவற்றை
அவை தோன்றும் நாட்டிலிருந்து கொடுவருதலும் காண்க. இதனோடு,
மணியும் பொன்னு
மயிற்றிழைப் பீலியும்
அணியு மானைவெண் கோடு மகிலுந்தன்
இணையி லாரமு மின்னகொண் டேகலான்
வணிக மாக்களை யொத்ததல் வாரியே(கம்ப-பால, ஆற்றுப்.எ) |
எனவரும் செய்யுளையும்
ஒப்புக்காண்க. புலம்-நாடு: ஆகுபெயர் நாட்டிலுள்ளார் என்க. குறி-இலக்கணம்.
|