பக்கம் எண் :

92கல்லாடம்[செய்யுள்9]



14-17: விழைதரும்...............ஆகியும்

     (இ-ள்) விழைதரும் உழவும் வித்தும் நாறும் தழைதலின்-எல்லோரானும் விரும்பப்படுகின்ற உழவுத் தொழிலும் விதைகளும் பயிரும் தன்னால் யாண்டும் தழைதலாலே; வேளாண் தலைவன் ஆகியும்-வேளாளர் தலைவனை ஒத்தும் என்க.

     (வி-ம்.) உழவு எல்லோராலும் விரும்பப்படுதலால் விழை தரும் உழவு என்றார். நாறு-நாற்று; ஈண்டு ஆகுபெயராய்ப் பயிர்களைக் குறித்தது நின்றது. உழவு முதலியன தழைதற்கு யாறும் வேளாளனும் காரணங்களாதல் உணர்க.

18-20: விரிதிரை..............................தொழிலென்னன

     (இ-ள்) விரிதிரை வையைத் திருநதி சூழ்ந்த-விரிகின்ற அலைகளையுடைய வையையாகிய அழகிய பேரியாறு சூழ்ந்த; மதுரை அம்பதி நிறைமைமலர் களத்தன்-மதுரை என்னும் அழகிய நகரின்கண் நிறைந்து எழுந்தருளியுள்ள குவளை மலர் போன்ற மிடற்றினையுடைய இறைவனுடைய இணை அடி வழுத்தார். அணை தொழில் என்ன-இரண்டாகிய திருவடிகளைப் புகழ்ந்து வணங்காத மடவோர் பொருந்திய தொழிலே போல என்க.

     (வி-ம்.) பதுமனும் முகிற் செல்வனும் நிமலனும் அமரர்க்கரசனும் மறையோனும் மன்னவனும் வணிகனும் வேளாண் டலைவனும் ஆகிய இவரையெல்லாம் தனித்தனி ஒத்துத் திரை விரிகின்ற வையை நதி என்க. மைமலர்-குவளைமலர், பதி இறை என்றும் பாடம். இதற்குப் பதியிற்றங்கா நின்ற எனப் பொருள் கொள்க.

21-22; கைதை...............எடுத்தும்

     (இ-ள்) கைதை அங்கரை செய் பொய்தல் பாவையோடு இருந்திரை எடுக்க-தோழி! முன்பு ஒருநாள் யாம் தாழைகளடர்ந்த அழகிய கடற்கரையின்கண்ணே விளையாடுதற்கு மணலால் இயற்றிய சிறுவீட்டின்கண் நமது பைஞ்சாய்ப் பாவையோடு (நீ பூக்கொய்யப் பிரிகின்ற காலத்தே கீழ்க்காற்று மிகுதலால்) கரையேறா நின்ற அலையினையுடைய கடல் என்னையும் கவர்ந்து கொண்டு போகா நிற்ப; பொரு திசை எடுத்தும்-தாக்கா நின்ற அக்கடலினின்றும் என்னை எடுத்தும் என்க.

     (வி-ம்.) இருந்திரை-கடல். இருதிரை என்றும் பாடம். கைதை-தாழை. பொய்தல்-விளையாட்டு. பொருதிரை-பொருதுந்திரை. எடுத்தும்-என்னைக் கரையேற்றி உய்யக்கொண்டும் என்றவாறு. பாவையோடு என்றதனால் என்னையும் என்று வருவித்தோதுக.

23-25: பூமி....................................இட்டும்

     (இ-ள்) பூழிப்போனகம் புதுவுடன் உண்டும்-புழுதியால் யாம் சமைத்த சிறுசோற்றைப் புதுமையுண்டாக நம்மோடு