பக்கம் எண் :

மூலமும் உரையும்97



வசபாண்டியனை. பாவை: உவமவாகு பெயர். தடாதகைப் பிராட்டியார் என்க.

19-23: சொன்றி.........................................கடவுள்

     (இ-ள்) பெரு சொன்றிமலை நனிதின்று தொலைத்த-பெரிய சோறாகிய மலையினை மிகவும் தின்று தீர்த்த; கார்உடல் சிறுநகைக் குறுந்தாள் பாரிடம்-கரிய உடலையும் சிறிய நகையினையும் குறிய கால்களையுமுடைய குண்டோதரன் என்னும் பூதம்; ஆற்றாது அலைந்த நீர்நசை அடக்க-ஆற்றாது வருந்துதற்குக் காரணமாகிய அதன் வேட்கையைத் தணிக்கும் பொருட்டு; மறிதிரைப் பெருநதி வரவழைத்து அருளிய-புரளுகின்ற அலைகளையுடைய வையைப் பேரியாற்றின்கண் வெள்ளம் வரும்படி செய்தருளிய; கூடல் அம்பதி இறை குணம்பெறுங் கடவுள்- நான்மாடக் கூடலாகிய அழகிய மதுரை நகரத்தின்கண் எழுந்தருளி இருக்கின்ற எண்குணங்களையுமுடைய அக்கடவுளுடைய என்க.

     (வி-ம்.) சொன்றி-சோறு. நனி: மிகுதிப்பொருள் குறித்த உரிச்சொல். தின்னுதல் அரிதென்பது தோன்ற நனிதின்று தொலைத்த என்றார். பாரிடம்-பூதம். நீர்நசை-நீர்வேட்கை. பெருநதி-வையை; நதி என்றது ஈண்டு வெள்ளத்தை. குணம்-எண்குணம். அவையாவன. தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்பன. திருமால் முதலிய ஏனைக் கடவுளர்க்கும் கடவுள் என்பார் பெருங்கடவுள் என்றார்.

24-24: முண்டகம்...............................................எழுந்தே

     (இ-ள்) முண்டகம் மலர்த்தும் முதிராச் சேவடி-அன்பருடைய நெஞ்சத்தாமரையை மலரச்செய்கின்ற மூவாத சிவந்த திருவடிகளை; தரித்த உள்ளத் தாமரையூரன்-எப்பொழுதும் சுமந்துள்ள நெஞ்சத்தாமரையையுடைய மருத நிலத்தலைவனாகிய நம்பெருமானுடைய; பொன்துணர் தாமம் புனைந்து ஒளிர் மணித்தேர்-பொன்னினாற் செய்த பூங்கொத்தினையுடைய மாலைகளைப் புனைந்து ஒளிரா நின்ற மணி கட்டப்பட்ட தேர்; வீதி வந்தது-உதோ நம்முடைய தெருவிலே வந்துற்றது கண்டீர்; வரலால் நம் ஏதம்தீர இருமருங்கு எழுந்து-ஆதலால் நம்முடைய குற்றம் தீரும்படி தேரினுடைய இரண்டு பக்கங்களினும் எழுந்து சென்று என்க.

     (வி-ம்.) முண்டகம்-தாமரை மலர். ஈண்டு அன்பருடைய நெஞ்சத்தாமரை மலர் என்க. முதிர்தல்-மூத்தல். எனவே முதிராச் சேவடி என்றது மூவாத சேவடி என்றவாறு. உள்ளத்தாமரை: