பக்கம் எண் :

636சித்தாந்த சாத்திரம்

அடைவிலே - பரமசிவன் கருணையினாலே அநாதியே திருவாய் மலர்ந்
தருளிய சிறந்த ஆகமங்களிலே யுள்ளபடி செவ்விய முறையாக, - உன்றனக்கு
- உனக்கு, - இத்தை உரைக்க உற்றுக்கேள் - இதனை யாஞ் சொல்ல நீ
நன்கு கேட்பாய்.                                               3

நாற்கோணம் பூமிபுனல் நண்ணுமதி யின்பாதி
ஏற்கும்அனல் முக்கோணம் எப்போதும் - ஆர்க்கும்
அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாய மாம்இவற்றால் உற்று.                4

     (உரை) பூமி நாற்கோணம் - பிருதிவியானது நாலு கோணமாயிருக்கும்,
- புனல் மதியின் பாதி நண்ணும் - அப்புவானது அர்த்த சந்திரனைப்
போன்றதாயிருக்கும், - அனல் முக்கோணம் ஏற்கும் - தேயுவானது மூன்று
கோணமாயிருக்கும், - கால் எப்போதும் அறுகோணம் ஆர்க்கும் -
வாயுவானது எக்காலமும் அறுகோணமாயிருக்கும், - ஆகாயம் வட்டம் -
ஆகாயமானது வட்டமாயிருக்கும், - ஆன்மா உற்று உறு காயம் இவற்றால்
ஆம் - ஆன்மாவுக்குப் பரிணாமமாய்ப் பொருந்துவதால் சரீரம் இத்தூல
பஞ்ச பூதங்களினின்றும் உண்டாம்.                               4

பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் - என்பார்
எழுத்து லவரயஅப் பாராதிக் கென்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது.                  5

     (உரை) பார் பொன் - பிருதிவியானது பொன்னிறமாயிருக்கும், - புனல்
வெண்மை - அப்புவானது வெள்ளைநிறமாயிருக்கும், - பொங்கும் அனல்
சிவப்பு - மிகுகின்ற தேயுவானது சிவந்தநிறமாய் நிற்கும், - வன் கால் கருமை
- வலிய வாயுவானது கருமைநிறமாயிருக்கும், - வளர் வான் தூமம் - மிகுந்த
ஆகாயமானது புகைநிறமாயிருக்கும், - என்பார் - என்று பெரியோர்
சொல்லுவர், - பாராதிக்கு ல வ ர ய அ எழுத்து - பிருதிவி முதலியவற்றிற்கு
முறையே லகாரமும் வகாரமும் ரகாரமும் யகாரமும் அகாரமும் ஆகிய
எழுத்து, - என்றும் அழுத்தமதாய் நிற்கும் அது - எப்போதும் பலமாய்ப்
பொருந்தி நிற்கும்.                                              5