பக்கம் எண் :

638சித்தாந்த சாத்திரம்

விஷ்ணு இரக்ஷிப்பன், - சொல்லில் உருத்திரனுந் துடைப்பன் - சொல்லு
மிடத்து உருத்திர மூர்த்தி சங்கரிப்பர், - திடப்பெறவே ஈசர் என்றுந்
திரோபவிப்பர் - நிச்சயமாக மகேசுவரமூர்த்தி எக்காலமுந் திரோபவம்
பண்ணுவர், - அன்றே சதாசிவரும் அநுக்கிரகராம் - அநாதிதொடங்கிச்
சதாசிவமூர்த்தி அநுக்கிரகம் பண்ணுபவராம்.                     8

மண்கடின மாய்த்தரிக்கும் வாரிகுளிர்ந் தேபதமாம்
ஒண்கனல்சுட் டொன்றுவிக்கும் ஓவாமல் - வண்கால்
பரந்துசலித் துத்திரட்டும் பார்க்கில்ஆ காயம்
நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து.               9

     (உரை) மண் கடினமாய்த் தரிக்கும் - பிருதிவியானது விடயங்களிலே
கடினகுணத்தைக் கொடுத்துக்கொண்டு நிற்கும், - வாரி குளிர்ந்தே பதமாம் -
அப்புவானது விடயங்களிலே நெகிழ்ந்த குணத்தைக் கொடுத்துக்கொண்டு
நிற்கும், - ஒண்கனல் சுட்டு ஒன்றுவிக்கும் - ஒள்ளிய தேயுவானது
விடயங்களிலே சுட்டு ஒன்றுதலைப் பண்ணிக்கொண்டு நிற்கும், - வண்
கால் ஓவாமற் பரந்து சலித்துத் திரட்டும் - வளப்பத்தையுடைய வாயுவானது
நீங்காது பரந்து சலித்து விடயங்களைத் திரட்டும், - பார்க்கில் ஆகாயம்
நிரந்தரமாய் நிறைந்து நிற்கும் - விசாரிக்குமிடத்து ஆகாயம் நிரந்தரமாய்
நிறைந்து விடயங்களுக்கெல்லாம் இடங்கொடுத்துக் கொண்டு நிற்கும்.     9

உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக்
கள்ளமிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் - மெள்ளவே
ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம்
ஆசைதரும் ஐம்புலனே யாம்.               10

     (உரை) உன்றனக்கு உள்ளபடி மாபூதம் ஓதினோம் - உனக்கு
உண்மையாகப் பஞ்ச மகா பூதங்களுஞ் சொன்னோம், - கள்ளமிகும்
ஐம்புலனும் மெள்ளவே கட்டுரைக்கில் - கள்ளமிகுந்த பஞ்சவிடயங்களை
மெல்லச் சொல்லுமிடத்து, - ஓசை பரிசம் உருவஞ் சுவை நாற்றம் ஆசை
தரும் ஐம்புலனேயாம் - சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் ஆகிய
இவை ஆசையைத் தருகின்ற அவ்வைம்புலன்களாம்.               10