பக்கம் எண் :

உண்மை விளக்கம்645


தத்துவங்களையும் ஒன்றொன்றாக விசாரித்தறிந்து, - ஓதில் - சொல்லுமிடத்து,
- அதில் உற்று அறிவாய் நின்ற பொருள்தானே காண் நீ - அம்முப்பத்தாறு
தத்துவங்களிலும் பொருந்தி அறிந்து வருகிற அறிவுகாண் நீயாகிய ஆன்மா.
                                                          26

குன்றா அருளாலே கூறினீர் என்வடிவு
பொன்றாத நும்முருவம் போதியீர் - நின்றருக்கன்
கண்ணுக்குக் காட்டுமாப் போலே உனதறிவின்
நண்ணிஅறி வித்திடுவோம் நாம்.           27

     (உரை) குன்றா அருளாலே ... போதியீர் - கெடாத கிருபையினாலே
அடியேனுடைய சொரூபத்தை அருளிச் செய்தீர், கெடாத தேவரீருடைய
சொரூபத்தையும் அடியேனுக்கு அருளிச்செய்ய வேண்டும், - நின்று ...போலே
- ஆதித்தப் பிரகாசமானது கண்ணுக்குப் பதார்த்தங்களைக் காட்டிக்கொண்டு
நிற்பதுபோல, - நாம் உனது அறிவின் நண்ணி அறிவித்திடுவோம் - நாம்
உனதறிவிலே பொருந்தி நின்று அறிவித்து வருவோம்.                27

அன்றியுங்கேள் ஆன்மாவால் ஆய்ந்தறியும் ஐம்பொறிகள்
இன்றி அறியா இவையென்ன - நின்றதுபோல்
ஓவாமல் உன்னை உணர்த்துவோம் உன்னறிவில்
மேவாமல் மேவிநா மே.                        28

     (உரை) அன்றியுங் கேள் - அல்லாமலுஞ் சொல்லுகிறோங் கேள், -
ஆன்மாவால் ஆய்ந்தறியும் ஐம்பொறிகள் இன்றி அறியா இவையென்ன -
ஆன்மாவினாலே நன்றாக அறிந்து காரியப்பட்டு வருகிற பஞ்சேந்திரி
-யங்களும் ஆன்மாவினாலேயறிந்து காரியப்பட்டு வருகிறோமென்றறியா, -
நின்றது போல் - அங்ஙனம் நின்ற பஞ்சேந்திரியங்கள்போல், - நாமே
உன்னறிவில் மேவாமல் மேவி - நாம் உன்னறிவிலே பொருந்தாமற்
பொருந்தி நின்று, - ஓவாமல் உன்னை உணர்த்துவோம் - விட்டு நீங்காமல்
உனக்கறிவிப்போம் (அதனை நீ அறியாய்).                         28

அக்கரங்கட் கெல்லாம் அகரஉயிர் நின்றாற்போல்
மிக்க உயிர்க்குயிராய் மேவினோம் - எக்கண்ணும்