பக்கம் எண் :

சீறாப்புராணம்

1004


இரண்டாம் பாகம்
 

2700. அஞ்ச லின்றிவிண் ணதிர்ந்திடு மொழியின் யாய்ந்த

     விஞ்சை வல்லவர் தெரிதர முகம்மது விளைத்த

     வஞ்சத் துட்படுஞ் சின்களி லொன்றென மதித்து

     நஞ்சுண் மீனென வொடுங்கினர் மக்கமா நகரார்.

25

      (இ-ள்) அவ்வாறு கருகப் பெற்ற திரு மக்கமா நகரத்தை யுடையவர்களான அந்தக் காபிர்கள் அச்சமின்றி ஆகாயம் நடுங்கிய அவ் வார்த்தைகள் யாவற்றையுந் தெளிந்த விஞ்சைத் தொழிலின் வல்லுநர்க ளுணரும் பொருட்டு முகம்ம தென்பவன் செய்த மாயத்தினுட் பொருந்திய ஜின்களில் ஓர் ஜின் கூறிய ஓசையென்று குறிப்பிட்டு விடத்தை யருந்திய மீனைப் போலும் ஒடுக்க முற்றார்கள்.

 

2701. விம்மி தப்புயத் தாயர்க டிரண்டுமெய் மகிழ்ந்து

     செம்ம லர்ப்பதந் தொழுதினி திறைஞ்சிடத் தெருண்ட

     நம்மி னத்தினு முரியளென் றினியநன் மொழிக

     ளும்மி மஃபதுக் கிசைத்தெழுந் தனர்மறை யுரவோர்.

26

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் ஒடுக்க முற, வேதங்களினது அறிஞரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பொலிவைக் கொண்ட தோள்களை யுடைய அந்த இடையர்கள் ஒன்று கூடிச் சரீரமானது மகிழ்ச்சியடைப் பெற்றுச் செந்நிறத்தை யுடைய தாமரைப் புட்பத்தை நிகர்த்த தங்களின் சரணங்களில் வணங்கி இனிமையுடன் பணிய, தெருட்சி யுற்ற நமது பந்துக்களைப் பார்க்கிலுஞ் சொந்தமானவ ளென்று உம்மி மகுப தென்பவளுக்கு இனிமையான நன்மை பொருந்திய வார்த்தைகளைக் கூறி அவ் விடத்தை விட்டும் எழும்பினார்கள்.