பக்கம் எண் :

சீறாப்புராணம்

1009


இரண்டாம் பாகம்
 

2715. அந்நகர் நாப்பணோ ரணிகொண் மேனிலைத்

     தன்னிடத் திருந்தொரு காபிர் தன்மகன்

     சென்னியை நீட்டியோர் திசையை நோக்கினான்

     மன்னிய புயற்குடை வரவு கண்டனன்.

14

      (இ-ள்) அந்தத் திரு மதீனமா நகரத்தினது மத்தியில் அலங்காரத்தைக் கொண்ட ஓர் மேன்மாடத் திருந்து ஒரு காபிரினது புதல்வன் தனது தலையை நீட்டி ஒரு திசையைப் பார்த்து அத் திசையிற் பொருந்திய மேகத்தினது கவிகையின் வரவை நோக்கினான்.

 

2716. சூன்முகிற் கவிகையிற் பல்லர் சூழ்வர

     மீனடு மதியென விளங்கித் தோன்றிய

     தானவ னியாவனென் றுளத்திற் றானுணர்ந்

     தீனமின் முகம்மதா மென்று தேறினான்.

15

      (இ-ள்) அவ்வாறு நோக்கிய அவன் சூலைக் கொண்ட மேகக் குடையினிடத்துப் பல ஜனங்கள் வளைந்து வரும் வண்ணம் நட்சத்திரக் கூட்டத்தினது மத்தியிலுள்ள சந்திரனைப் போன்று பிரகாசித்து விளங்கிய தானவ னான அவன் யாவன்? என்று தனது மனதின்கண் ணறிந்து குற்ற மற்ற முகம்மது ஆகுமென்று தெளிந்தான்.

 

2717. மதினமண் ணிருந்துமுன் மார்க்க நிண்ணய

     விதியினை யினத்தொடும் வெறுத்து வேறொரு

     புதியநிண் ணயத்தினைப் பொருந்து மாந்தர்கா

     ளிதமுறக் கேண்மினென் றெடுத்துச் சொல்லுவான்.

16

      (இ-ள்) அவ்வாறு தெளிந்த அவன் இந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் ணுறைந்து முன்னுள்ள மார்க்கத்தினது உண்மையை யுடைய நியமிப்பைத் தங்களின் கூட்டத்தோடும் நிந்தித்து வேறொரு நூதன மாகிய உண்மையைப் பொருந்திய ஜனங்களே! நீங்கள் இனிமையுடன் கேட்பீர்களாக, என்று எடுத்துக் கூறுவான்.

 

2718. கறாவெனுந் திசையையோர் கடிகை நீங்கிலா

     துறாதெதிர் சென்றுபார்த் துலையும் வீரர்கா

     ளறாநெறி முகம்மதென் பவன்பல் பேருடன்

     மறாதமைக் கவிகையின் வருகின் றானென்றான்.

17

      (இ-ள்) கறா வென்று சொல்லுந் திசையை ஒரு சமயமும் மாறாமலும் கூடாமலும் முன்னர்ப் போய் நோக்கி அலையும் வலிமையை யுடையவர்களே! முகம்ம தென்று கூறும் அபிதானத்தை யுடையவன் சன்மார்க்க மற்றுப் பல ஜனங்களோடு நீங்காத மேகக் குடையினிடத்து இங்கு வருகின்றா னென்று கூறினான்.