பக்கம் எண் :

சீறாப்புராணம்

102


முதற்பாகம்
 

பிள்ளைப்பேற்றின் விஷயமான இவற்றைச் சொல்லி யாள்விட்டார்கள்.

 

230. உரைத்த வாசகங் கேட்டலு மந்நக ருறைவோ

    ரிரைத்த டங்கலு மொருமொழிப் படவெடுத் திசையா

    வரைத்த னிக்கொடி யாமினா மனையினின் மறந்துங்

    கரைத்த லாயினும் வருவதில் லெனக்கழ றினரே.

65

     (இ-ள்) தாய் முதலாயினார் விடுத்த ஆள் சென்று சொன்ன சொல்லைக் கேட்ட மாத்திரத்தில், அந்த மக்கமாநகரத்தில் வசிப்போராகிய பெண்களனைவரும் ஆமினா அவர்களின் மகப்பேற்றிற்கு வரச்சம்மதியாமல் ஆரவாரித்து மலைமேலுள்ள ஒப்பற்ற கொடிபோலும் ஆமினா அவர்களது வீட்டில் மறந்தேனும் அல்லது ஒளித்தேனும் யாங்கள் வருவதில்லையென்று ஒரே சொல்லாகச் சொன்னார்கள்.

 

231. உற்ற வாய்மையைக் கேட்டலு மாமினா வுலைந்து

    குற்ற மேதுநம் மிடத்தென மனத்தினிற் குறித்துப்

    பெற்ற சூல்வலி யடிக்கடி பெரிதெனப் பதறி

    வெற்றி வாட்கரத் தப்துல்முத் தலிபுக்காள் விடுத்தார்.

66

     (இ-ள்) அப்பெண்களைக் கூப்பிட்டுப்போன ஆள் திரும்பிவந்து சொன்ன சொல்லை ஆமினா அவர்கள் காதாற் கேட்ட மாத்திரத்தில் உலைந்து வருந்தி அவர்கள் நம்மனைக்குவர மறுப்பதற்கு நம்மிடத்திலுள்ள குற்றம் என்னவென்று மனத்தினாற் குறிப்பிட்டு, பெற்றிருக்கின்ற கருப்பத்தின் வருத்தமானது அப்போதைக்கப்போது பெரிதாகின்றதேயென்று நடுங்கி வெற்றிதங்கிய வாளாயுதத்தைக் கொண்ட கையையுடைய அப்துல் முத்தலிபுக்குத் தமது நோவைச் சொல்லி ஆள் விட்டார்கள்.

 

232. சருவு வேல்விழி மடந்தையர் விடுத்தவர் சாற்றக்

    குரிசில் கேட்டவ ரவர்க்கெல்லாம் வகைவகை கூறி

    வருக வென்றலுங் கொடியிடைப் பிடிநடை மடவா

    ரொருவ ரும்மவண் புகுவதில் லெனமறுத் துரைத்தார்.

67

     (இ-ள்) கொளுவிப் போதலான வேல்போலுங் கண்களையுடைய பெண்ணாகிய ஆமினா அவர்களா லனுப்பட்டவர் ஆங்கு போய் சொல்லப் பெருமையிற் சிறந்தோராகிய அப்துல் முத்தலிபானவர் கேள்வியுற்று அவ்வவர்கட்குத் தரந்தரமாக மகப்பேற்றின் விடயத்தைக் குறித்துச் சொல்லவேண்டுவன வெல்லாம் சொல்லி நீவிர் எம்மனையகத்து வரல்வேண்டுமென்று சொன்னமாத்திரத்தில்; கொடிபோலும் இடையினையும் பெண்யானைபோலும் நடையினைமுடைய