இரண்டாம் பாகம்
கபுகாபுப் படலம்
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
2768.
மாரியங் கவிகை
வள்ளன் மதீனமா நகரம் புக்கிச்
சீரிய மறையின்
றீஞ்சொற் செவ்வியோர்க் கினிதி னூட்டிக்
கூரிலைக் கதிர்வேற்
செங்கைத் தீனவர் குழாங்கொண் டேத்த
வேரணி அபூஅய் யூபி
னில்லிடத் திருக்கு நாளில்.
1
(இ-ள்) அழகிய
மேகக் குடையை யுடைய வள்ள லான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா அஹ்மது
முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் திரு மதீனமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்து
சிறப்பினை யுடைய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது இனிய வசனங்களை அழகை யுடையவர்களான அந்
நகரத்தார்களுக்கு இன்பத்தோடும் அருத்தி இலையைப் போன்ற கூரிய பிரகாசத்தைக் கொண்ட வேலாயுதத்தினது
சிவந்த கையை யுடைய தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தார்கள் கூட்ட முற்றுத் துதிக்கும்
வண்ணம் சுந்தரத்தைப் பூண்ட அபூ அய்யூ பென்பவரின் வீட்டின்கண் ணுறையுந் தினத்தில்.
2769.
அறத்தினிற் புகுந்து
வேதத் தறிவினிற் குடிகொண் டோங்குந்
திறத்தினர் அம்மா
றென்னுஞ் சீயமற் றொருவ ரேனும்
பெறற்கரும் வடிவின்
மிக்கோ ரிளவல்கைப் பிடித்து விண்ணோர்
புறத்தினிற் காவ
லோம்பும் புண்ணியர் திருமுன் வந்தார்.
2
(இ-ள்) தேவர்களாகிய
மலாயிக்கத்து மார்கள் நான்கு பக்கங்களிலும் காவற் புரிகின்ற தருமத்தை யுடையவர்களான நாயகம்
நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் தெய்வீகந்
தங்கிய சந்நிதானத்தில் புண்ணியத்திற் புகுந்து வேத ஞானத்திற் குடி கொண்டு ஓங்கா நிற்கும்
வலிமைய ராகிய அம்மா றென்று கூறும் சிங்க மானவர் வேறொருவரேனும் அடைதற் கரிய வடிவினால் மிகைப்
புற்ற ஓர் இளம் பிராயத்தை யுடைய சிறுவனினது கரத்தைப் பற்றிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
2770.
மந்தரப் புயமுஞ்
சோதி வடிவுமேல் வளர்ந்து நீண்ட
சுந்தரக் கரமு
மாறாச் சுடர்மதி முகமு நோக்கிச்
சிந்தையுட்
களித்துத் துன்பத் திருக்கறத் திருக்குங் கையுங்
கந்தமென்
பதத்திற் சேர்த்திக் கண்ணினீர் கலுழ நின்றான்.
3
|