பக்கம் எண் :

சீறாப்புராணம்

1031


இரண்டாம் பாகம்
 

கொண்ட இரத்தினங்களினா லியற்றிய முகட்டா லோங்கும் ஒரு பெட்டியினது பூட்டின் முத்திரையை விடுத்து அதனுள் எனது நயனங்களிற் றோற்றாத கிரந்தத்தினது ஆசையால் விரைவில் தேடினேன்.

 

2785. அன்னவிற் பேழை யுட்க ணறையினா டகத்தின் வாய்ந்த

     மின்னவிர் கிரணச் செப்பொன் றிருந்தமென் விரலாற் றீண்டி

     யென்னிதென் றறிவோ மென்ன வெடுப்பமுத் திரைக டம்மாற்

     பின்னரும் வைத்து மீண்டே தோவெனப் பேதுற் றேனால்.

18

      (இ-ள்) அவ்வாறு தேட, அந்தப் பிரகாசத்தைக் கொண்ட பெட்டியினகத்துள்ள அறையின் கண் பொன்னினாற் சிறப்புற்ற ஒளிவானது இலங்குகின்ற கிரணங்களை யுடைய ஒரு செப்பிருந்தது. அச்செப்பை மெல்லிய விரற்களினால் தொட்டு இஃது என்ன தென்றுணர்வோ மென்று எடுக்க, அதிலிருந்த முத்திரைகளினால் அதை மீண்டும் வைத்து விட்டுத் திரும்பி இஃது யாது? என்று சொல்லி மயக்க மடைந்தேன்.

 

2786. சிந்தையி னையந் தோன்றித் தெளிவிலா தெம்மான் பாலின்

     வந்துதாள் வழுத்தி யில்லின் வயங்குபொற் பேழை யின்க

     ணெந்தையே யிருப்ப தென்னென் றியம்பினே னியம்ப லோடுஞ்

     சந்ததி யென்னக் கூவி யன்பொடு சாற்று வானால்.

19

      (இ-ள்) அவ்வாறு மனதின் கண் சந்தேக முண்டாகி அஃதை இன்ன தென்று தேற்ற மடையாது எமது பிரானாகிய தந்தையினிடத்திற் போய் அவனது பாதங்களைத் துதித்து எமது பிதாவே! நமது வீட்டிற் பிரகாசியா நிற்கும் சொர்ணப் பெட்டியினிடத்து இருப்பது யாது? என்று கேட்டேன். அவ்விதங் கேட்டவளவில் அவன் எனது புதல்வனே! என்று என்னை அழைத்து அன்போடும் சொல்லுவான்.

 

2787. சொல்லிய கனகச் செப்பிற் சுடர்மணித் தொகுதி யேனு

     மெல்லையி னிதிய மேனு மிழைபல வேனு மியாது

     மொல்லைநீ யறியா வண்ண மொளித்ததென் றெள்ளல் வேண்டா

     மல்லலம் புவியிற் செய்த தவத்தினால் வந்த மைந்த.

20

      (இ-ள்) வலிமையை யுடைய அழகிய இவ் வுலகத்தின்கண் யாங்களியற்றிய தவத்தினால் அவதரித்த எனது மகனே! நீ கூறிய அந்தச் சொர்ணச் செப்பின் கண் பிரகாசத்தைக் கொண்ட இரத்தினக் கூட்டங்களாயினும், கணக்கற்ற திரவியங்க ளாயினும், பல ஆபரணங்களாயினும், இவற்றின் எதுவும் நீ தெரியாத விதத்தில் விரைவில் மறைத்து வைத்திருக்கிற தென்று எங்களை நிந்திக்க வேண்டாம்.