பக்கம் எண் :

சீறாப்புராணம்

1032


இரண்டாம் பாகம்
 

2788. மாயமுங் கபடும் பொய்யு மறையெனத் திரட்டி முன்னா

     ளாயதே வதத்தின் மார்க்கத் தறத்தினை வழுக்கிப் பேசுந்

     தீயவ னொருவன் றோன்றித் தீனெனு மதமுண் டாகக்

     காய்கதி ரவனைப் போற்பிற் காலத்தில் வருவ னென்றே.

21

      (இ-ள்) பிற்காலத்தில் வஞ்சனையையும், கபடத்தையும், அசத்தியத்தையும் வேதமென்று சொல்லும் வண்ணம் ஒன்றாய்ச் சேர்த்து, ஆதி காலத்தி லுண்டான தேவதங்களின் மார்க்கத்தினது புண்ணியத்தை வழுக்கிக் கூறும் கொடுமையை யுடையவனான ஒருவன் இவ்வுலகத்தின் கண் அவதரித்துத் தீனுல் இஸ்லா மென்னும் சமயமான துண்டாகும்படி சுடா நிற்கும் சூரியனை நிகர்த்து வருவான்.

 

2789. அன்னவ னெறியான் மாந்தர்க் கடுபகை பெரிதுண் டாகு

     மென்னமுற் பெரியோ ராய்ந்த வியன்மறை யதனுட் கண்டு

     பன்னிநிச் சயித்துப் பேரும் புள்ளியும் பரிவிற் றீட்டும்

     பொன்னின்முத் திரைநீ தீண்ட லன்றெனப் புகழ்ந்து சொன்னான்.

22

      (இ-ள்) அவனது மார்க்கத்தால் இவ் வுலகத்தினிடத்துள்ள மானிடர்கட்கு மேற் கொள்ளா நிற்கும் விரோதமானது மிகவா யுண்டாகு மென்று முன்னுள்ள பெரியோர்கள் தெளிந்த இயல்பினையுடைய வேதங்களிற் பார்த்துத் தேறித் தீர்மனித்து அவனது நாமத்தையும் அடையாளத்தையும் அன்போடும் எழுதிய அழகிய முத்திரையை யுடையது. நீ தொடக்கூடிய தல்லவென்று துதித்துக் கூறினான்.

 

2790. பண்டைமுற் பெரியோர் தேர்ந்த பழமொழி வழக்க மியாவுங்

     கண்டறிந் திடுக னன்றென் றெண்ணிய கருத்தி னானு

     மிண்டுதந் தையர்சொன் மாற்ற லென்பதோர் வெறுப்பி னானு

     மண்டுமை யங்க டம்மால் வைகினன் சிறிது நாளால்.

23

      (இ-ள்) அவன் அவ்விதங் கூற, பழைய காலத்தில் முன்னுள்ள பெரியோர்கள் தெளிந்த பழைய வசனங்களினது வழக்கங்கள் யாவையும் பார்த்துணர்தல் நல்லதென யான் சிந்தித்த சிந்தையினாலும், நெருங்கிய தமது பிதாவான பண்டிதனது வார்த்தைகள் வேறுபா டென்பதான ஓர் வெறுப்பினாலும் எனது மனதின் கண் மண்டிய ஆசங்கையால் சில நாளாகத் தங்கியிருந்தேன்.

 

2791. இவ்வண்ண நிகழுங் காலத் தெந்தைபே ரீந்தி னூறுங்

     கவ்வையிற் பெரிது மாந்திக் கண்சிவந் திதயம் வேறாய்ச்

     செவ்விதி னுணர்வு மாறித் தெரிந்துரை பகர்கி லாது

     வெவ்விய சீற்ற மீக்கொண் டிருந்தனன் வெறியின் மன்னோ.

24