பக்கம் எண் :

சீறாப்புராணம்

1043


இரண்டாம் பாகம்
 

2822. மண்ணகத் தடியுந் தோன்றா மான்மத நறையு மாறா

     விண்முகிற் கவிகை நீங்கா மெய்யொளி யிருளின் மாயா

     நண்ணுமிப் புதுமை யெல்லா முகம்மது நபிக்கல் லாதே

     யெண்ணிலா மக்க ளியாக்கை யெடுத்தவ ரியார்க்கு மின்றே.

55

      (இ-ள்) இரு பாதங்களும் இப் பூமியினிடத்துத் தெரியாது.Êசரீரத்தின் கண் கத்தூரி வாசனை நீங்காது. ஆகாயத்தினிடத்துள்ள மேகக் குடை மாறாது. தேகத்தினது பிரகாசமானது அந்த காரத்திலுங் கெடாது. பொருந்திய இந்த அதிசயங்க ளனைத்தும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக் கல்லாமற் கணக்கற்ற மானிட வுடம்பை எடுத்தவர்க ளியாவருக்கு மில்லை.

 

2823. வாரணத் தரசர்க் கேற்ப வருமமா வாசைப் போதிற்

     பூரண மதியந் தோன்றி முகம்மதைப் புகழ்ந்து நுந்த

     மாரணக் கலிமா யானு மறைந்தனென் றுரைத்துப் போமாற்

     பாரினி லைய மெய்தப் படுவதென் பகரு வீரே.

56

      (இ-ள்) அன்றியும், யானைப் படைகளை யுடைய ஹபீ பரசருக்கு ஏற்கும் வண்ணம் வந்த அமாவாசை இரவில் பூரணச் சந்திரனானது உதயமாகி நாயகம் நபிகட் பெருமானார் நபி முக்கமது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் துதித்து உங்களது புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது, ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவை யானும் ஓதினே னென்று சொல்லி ஓதிப் போகுமே யானால் இப் பூமியின் கண் சந்தேக மெய்தப்படுவ தென்னை? அதைச் சொல்லுங்கள்.

 

2824. இறுதியில் புறுக்கான் வேதத் தின்வழி சுவன வாழ்வு

     பெறுவரென் றாதி வேத மூன்றினும் பேசித் தென்றான்

     மறுமொழி யாது வேனென் றியாவர்வாய் திறக்க வல்லா

     ருறுதியைத் தவிர்தல் செய்த லுலகினுக் கிழிவ தாமால்.

57

      (இ-ள்) அன்றியும் முடிவில் யாவர்களும் புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தினது தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தால் மோட்ச வாழ்வை யடைவார்க ளென்று எப்பொருட்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவினது தௌறாத்து, இஞ்சில், சபூறென்னும் மூன்று வேதங்களும் இன்னமுங் கூறினவென்றால் வேறு வார்த்தை சொல்லுவே னென்று தமது வாயைத் திறக்க வல்லமையை யுடையார் யாவர்? ஒருவருமில்லர். உண்மையை யொழியச் செய்வது இவ்வுலகத்திற்கு நிந்தையை யுடையதாகும்.