பக்கம் எண் :

சீறாப்புராணம்

1044


இரண்டாம் பாகம்
 

2825. ஈதெலா மறிந்து மென்ற னிதயம்வே றாகி நுந்தம்

     போதனைக் கடங்கே னாவி பொன்றினுந் தாதைக் கேற்பச்

     சூதரு முடன்று செய்யாத் துன்பமே செய்யச் சொன்மின்

     வேதமு முணர்ந்து நீதி விளக்குதற் கமைந்து நின்றீர்.

58

     (இ-ள்) வேதங்களையும், சாத்திரங்களையுந் தெரிந்து நியாயத்தை விளக்குவதற்காகப் பொருந்தி நின்றவர்களே! இச் சமாச்சாரங்க ளெல்லாவற்றையு முணர்ந்தும் எனது மனமானது வேறாகப் பெற்று எனது பிராணன் பொன்றினாலும் யான் உங்களது போதனைக்கு அமைந்து நடக்க மாட்டேன். நீங்கள் எனது தந்தைக்கு ஏற்கும் வண்ணம் யூத ஜாதியினரையும் கோபித்து இயற்றாத வேதனைகளை யியற்றச் சொல்லுங்கள்.

 

2826. மறுவிலா வேத நூலின் முகம்மதின் கலிமா வோதிப்

     பெறுகதி பெறுவ தல்லாற் பேசுநும் மாற்றந் தன்னா

     லிறுதியி னரக வாதி யெனும்பெய ரெடுப்ப தின்றென்

     றறுதியின் மொழிந்து நின்றே னாதிதன் றூதின் மிக்கோய்.

59

      (இ-ள்) அன்றியும், யாவற்றிற்கும் முதன்மையனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் றசூல் மார்களில் மேன்மையை யுடையவர்களாகிய நபிகட் பெருமானே களங்க மற்ற புறுக்கானுல் அலீ மென்னும் வேத சாத்திரத்தை யுடைய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகி வசல்ல மவர்களின் ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவைச் சொல்லி அடையா நிற்கும் மோட்ச வாழ்வை யடைவதே யல்லாமல் நீங்கள் சொல்லுகின்ற உங்களது வார்த்தைகளால் முடிவில் நரக வாதியென்னும் நாமத்தைச் சுமப்பதில்லை யென்று கடைசியாகக் கூறி நின்றேன்.

 

2827. பன்னிய மொழிகள் கேட்டி யாவரு நகைத்துப் பாவி

     சொன்னவை யறியா னூழிற் சூழ்விதித் துன்ப மாற்ற

     மன்னவ ருளரோ வென்ன வருமமுற் றெனது தாதை

     தன்னகம் பொருந்த வேறு சூழ்ச்சியிற் சாற்று வாரால்.

60

      (இ-ள்) அவ்வாறு யான் கூறிய வார்த்தைகளை அவர்களியாவருங் கேள்வி யுற்றுச் சிரித்துப் பாதகன், நாம் கூறியவைகளை யுணரான். பூர்வ கன்மத்தால் வந்து வளைந்த விதியினது வேதனையை நீக்க அரசர்களுவரா? இல்லரென்று வைராக்கியத்தைப் பொருந்தி எனது தந்தையினது மனமானது சம்மதிக்கும் வண்ணம் வேறு ஆலோசனையினாற் கூறுவார்கள்.