பக்கம் எண் :

சீறாப்புராணம்

1045


இரண்டாம் பாகம்
 

2828. புதுநறைக் கனிபா றேனெய் நாடொறும் பொசித்துத் தின்ப

     ததிமது ரங்க ளியாவும் பசியின்றி யயின்ற தாலுங்

     கதிர்விரி மணிபொன் னாடை பூண்டுகண் களித்த தாலு

     மதிவல்லோய் பெரிது போற்றி வைத்துநீ வளர்க்க லாலும்.

61

      (இ-ள்) அறிவினது வல்லமையை யுடைய பண்டிதரே! பிரதி தினமும் இவன் நூதன மாகிய வாசனையை யுடைய பழம், பால், தேன், நெய்யாகிய இவைகளை யருந்தி உண்ப தான மிகு உருசியை யுடைய பதார்த்தங்க ளெல்லாவற்றையும் பசி யில்லாம லுண்டதாலும், பிரகாசத்தை வீசா நிற்கும் இரத்தினங்களைக் கொண்ட ஆபரணங்களையும் வத்திரங்களையு மணிந்து கண்களானவை மகிழப் பெற்றதாலும், நீவிர் அதிகமாகப் பேணி வளர்த்ததாலும்.

 

2829. மீறிய செல்வந் தன்னால் வெறிமதம் பெருத்து மேன்மே

     லூறிய நினைவு போக்கி யுணர்வழிந் தொடுங்கா நின்று

    மாறுகொண் டிசையா மாற்றம் வைகலும் பிதற்று கின்றான்

     சீறுத றவிர்த்திக் கோட்டிக் கேற்பவை செய்தல் வேண்டும்.

62

      (இ-ள்) அதிகரித்த ஆக்கத்தினாலும், மயக்கத்தினது செருக்கானது மிகப் பெற்று மேலும் மேலுஞ் சுரக்கப் பெற்ற சிந்தனையை யொழித்து அறிவானது அழிதலுற்று அடங்காமல் நின்று வேற்றுமை கொண்டு சொல்லாத வார்த்தைகளைப் பிரதி தினமும் சொல்லிப் புலம்புகின்றான். நீவிர் இந்தத் துன்பத்திற்குக் கோபிப்பதை யொழித்துப் பொருந்தியவைகளைப் புரிதல் வேண்டும்.

 

2830. கரியகம் பளத்தைப் போர்த்து வீக்கிய கலைக ணீத்தோ

     ரிருடரு மனையி லாக்கி யாவரு முகங்கொ டாமற்

     பொரிதரு முவர்நீ ரோடு கசந்தபோ சனமு மாக

     வொருபிடி மூன்று நாளைக் கொருதர மளித்தல் வேண்டும்.

63

      (இ-ள்) அன்றியும், கரு நிறத்தை யுடைய ஓர் கம்பளியினால் இவனை மூடிஇவன் கட்டியிருக்கும் வத்திரங்களை யகற்றி ஒப்பற்ற மூடிஇவன் கட்டியிருக்கும் வத்திரங்களை யகற்றி ஒப்பற்ற அந்தகாரத்தைத் தரா நிற்கும் ஒரு வீட்டின் கண் ஆக்கி ஒருவரும் இவனுக்கு முகங் கொடுத்துப் பேசாமல் மூன்று தினத்திற் கொருதடவை பொரிகின்ற உவரை யுடைய ஜலத்துடன் கசப்பைக் கொண்ட ஒரு பிடி அன்னமு மாகக் கொடுத்தல் வேண்டும்.