இரண்டாம் பாகம்
2831.
இத்தொழி லியற்று வீரே லிடும்பெனு மதத்தால் வந்த
பித்தமும் பிதற்று நீங்கும் பிறிதொரு தீங்கும் வாரா
துத்தம மிவைகொ லென்ன வுரைத்தவர் பலரும் போனா
ரத்தனு மனத்துட் கொண்டா னனையுமொத் திருந்தா ளன்றே.
64
(இ-ள்) இந்த வேலையை
நீவிர் செய்வீரே யானால் அகந்தை யென்று சொல்லுஞ் செருக்கினால் வந்து சேர்ந்த பைத்தியமும்
புலம்பலு மகலும். வேறொரு தீமையும் வராது. இவையே முதன்மையான யோசனை யென்று கூறி அவர்கள்
பலரும் அவ் விடத்தை விட்டுஞ் சென்றார்கள். எனது தந்தையும் அவ் வார்த்தைகளை இதயத்தின் கண்
ஏற்றுக் கொண்டான். அதற்கு எனது தாயும் சம்மதித்திருந்தாள்.
2832.
அடுத்தநா ளோர்பாழ் வீட்டி லடைத்துக்கம் பளத்தான் மூடி
யெடுத்துவர் நீருங் கைப்பி னியைந்தபோ சனமு மாகக்
கொடுத்தனர் மூன்று நாளைக் கொருதரங் கொள்க வென்ன
முடித்தன ரீன்றார் கேளிர் குழுவுடன் மொழிந்த வாற்றால்.
65
(இ-ள்) எனது குடும்பத்தார்கள்
அவ்வாறு தங்கள் கூட்டத்தோடுங் கூறிய மார்க்கத்தால் எனது தாய் தந்தையர்கள் என்னை அடுத்த தினத்தில்
ஒரு பாழ் மனையி லடைத்துக் கம்பளத்தினாற் போர்த்து உவரையுடைய தண்ணீரும் கசப்பினாற்
பொருந்திய அன்னமு மாக எடுத்துக் கொடுத்து மூன்று தினத்திற் கொரு தினமுட் கொள்வாயாக வென்று
தீர்மானித்தார்கள்.
2833.
உய்த்திட மூன்று நாளைக் கொருதர மிருளி னென்பால்
வைத்திடு முணவிற் சற்றே தீண்டவாய்ப் பெய்தே னாவும்
பத்திய னெயிறு முள்ளுங் கண்டமும் படர்ந்து வேம்பின்
கைத்தது கூறக் கேட்டோர் செவியினுங் கசக்கு மன்னோ.
66
(இ-ள்) அவ்வாறு தீர்மானித்து
யான் ஜீவிக்கும் வண்ணம் மூன்று தினத்திற் கொருதடவை அந்தகாரத்தி லென்னிடத்தில் வைத்த அவ்வன்னத்திற்
கொஞ்சம் எனது கையால் தொட்டு வாயின் கண் பெய்தேன். அது எனது நாவிலும், வரிசையை யுடைய பற்களிலும்,
அகத்திலும், தொண்டையிலும், பரவி வேம்பைப் போலுங் கசந்தது. அதைச் சொல்லக் கேள்வி யுற்றவர்களின்
காதுகளிலும் கசக்கும்.
2834.
காசினி யிடத்தி னந்தக் கசப்பன்றிக் கசப்பு மில்லை
யோசைமாக் கடனீர் வைத்த வுப்பநீர்க் குவமை யென்ன
வாசினற் பசிமீக் கொண்டு மருந்திடப் பொருந்தி டாமன்
மாசுறு மிருளிற் றன்னந் தனியொடும் வருந்தி னேனால்.
67
|