இரண்டாம் பாகம்
2841.
இட்டகாற் றளையி னோடு மெண்பதின் காவ தத்தின்
மட்டெனைக் கொடுபோய்க் காலித் தொழுவினோர் மருங்கிற் சேர்த்து
விட்டிடா வண்ண மாறா வேலைகள் பலவுஞ் சாட்டிக்
கட்டளை யாக வைத்தார் பசுத்தொழுக் காவ லோரே.
74
(இ-ள்) அவ்வித மீய,
பசுக் கூட்டத்தினது காவலையுடையவர்களான அவ் விடையர்கள் எனது பாதங்களி லிட்ட விலங்குடன் என்னை
விடாதபடி எண்பது காத தூர மட்டும் கொண்டு சென்று பசுத் தொழுவத்தினது ஓர் பாகத்திற் சேர்த்து
ஒழியாத பல வேலைகளையும் எனக்குச் சாட்டி யொழுங்காக வைத்திருந்தார்கள்.
2842.
கரத்தினிற் றாளிற் பூட்டுந் தளைவிடுத் திலர்கண் ணார
வருத்தமீ தென்று நோக்கார் வயிறள வுணவு மீயார்
பொருத்திடாத் தொழில்க ளெல்லாம் பூட்டுவர் தாதை யென்பா
லிருத்திய வெகுளி மாறாக் கொடுமைக்கெண் மடங்கு செய்தார்.
75
(இ-ள்) அன்றியும்,
அவர்கள் எனது இரு கைகளிலும், கால்களிலும் பூட்டிய விலங்கை விடுத்திலர். விழிகளினால்
பொருந்தும்படி எனது துன்பத்தை இன்ன தென்று பார்த்திலர். எனது உதரத்தி னளவாக ஆகாரமுந் தந்திலர்.
என்னால் பொருத்த இயலாத வேலைக ளெல்லா வற்றையும் என்னைச் செய்யும்படி பொருத்தினார்கள்.
எனது தந்தை யானவன் என்னிடத்திலிருக்க வைத்த நீங்காத கோபத்தினது பொல்லாங்குக்கு எட்டுப்
பங்கு செய்தார்கள்.
2843.
தொல்லைமுன் விதியாற் றோன்றுந் துன்பங்கள் விடுத்து நீங்கு
மெல்லைய தன்றி நீங்கா தென்பதை மனத்தி லெண்ணி
முல்லையம் பாடி யோர்க்கு முறைமுறைத் தொழும்ப னாகி
யல்லலுற் றுறைந்தேன் பன்னா ளருளடை கிடக்குங் கண்ணாய்.
76
(இ-ள்) அவர்கள் அவ்வாறு
செய்ய, காருண்ணிய மானது அடையாகக் கிடக்கப் பெற்ற விழிகளை யுடைய நபிகட் பெருமானே! யான்
பழமையாகிய முன்னுள்ள நியமத்தினாலுண்டாகா நிற்கும் வேதனைகள் நம்மை விட்டும் அகலும் நாளல்லாமல்
அகலா தென்று சொல்லுவதைச் சிந்தையின் கண் சிந்தித்து அழகிய முல்லை நிலத்தினர்களான அந்த
இடையர்களுக்கு வரிசை வரிசையாகத் தொண்ட னாகிப் பல தினந் துன்பத்தை யடைந்திருந்தேன்.
|