இரண்டாம் பாகம்
2844.
அடிமையின் றொழில்செய் தங்ங னிருந்தன னருக்க னோடிக்
குடதிசை புகத்தி காந்தக் குலவரை தொடுத்து விண்ணும்
படியுந்தோன் றாத வண்ணம் விடம்பரந் தென்ன மூடி
யிடியொடு மழையு மின்னுந் தோன்றிட விருண்ட மேகம்.
77
(இ-ள்) அவ்வாறு அவ்
விடத்தில் தொண்டனது வேலைகளைச் செய்திருந்தேன். ஒரு நாள் சூரிய னானவன் விரைந்து சென்று மேற்
றிசையிற் போய்ச் சேர, திக்குகளின் முடிவினது அட்ட குலமலைகள் தொட்டு வானமும் பூமியும் தெரியாத
விதத்தில் நஞ்சானது பரவியதைப் போன்று மேகங்களாற் மூடப் பெற்று இடியுடன் மழையும் மின்னலும்
உண்டாகும் வண்ணம் அந்தகார முற்றது.
2845.
அந்தவல் லிருளின் கண்ணே யையநுந் திருநா மத்தைப்
புந்தியி னினைத்துக் காண்ப தென்றெனப் பொருமி வாடி
நொந்திருந் தழுதேன் பூட்டுந் தளையெல்லாம் நுறுங்கி நூறாய்ச்
சிந்தின மனத்திற் கூண்ட துன்பமுஞ் சிதறிற் றன்றே.
78
(இ-ள்) அந்தக்
கொடிய இருளினிடத்து எனது குருவாகிய நபிகட் பெருமானே! யான் உங்களது தெய்வீகந் தங்கிய அபிதானத்தைச்
சிந்தையின் கண் சிந்தித்து உங்களைத் தெரிசிப்ப தெக் கால மென்று சொல்லிப் பொருமுத லுற்று
மெலிந்து வருந்தியிருந்து இரங்கினேன். உடனே எனது கால்களிலும் கைகளிலும் பூட்டிய விலங்குகளியாவும்
நூறாக நொய் தாகிச் சிதறின. இதயத்தினிடத்துக் கூடிய வருத்தமுஞ் சிந்திற்று.
2846.
என்னிரு விழியி னுள்ளார்ந் திருந்தநன் மணியே தேற்றத்
துன்னிநுந் திசையை நாடி நடப்பமென் றுள்ளத் தெண்ணிப்
பன்னிய புவியி னெட்டிப் பத்தடி நடந்தே னிப்பான்
மன்னவ னெனும்அம் மாறு தலைக்கடை வாயில் வந்தேன்.
79
(இ-ள்) அன்றியும்
எனது இரு கண்களி னுள்ளும் நிறைந்துறைந்த நல்ல மணியாகிய நபிகட் பெருமானே! யான் தெளிவினால்
உங்களது திசையைக் கருதி விரும்பிச் செல்குவோ மென்று மனதின் கண் சிந்தித்து நெருங்கிய இப்
பூமியினிடத்துத் தாவிப் பத்தடி தூரம் நடந்து வந்தேன். பின்னர் அரச ரென்று கூறா நிற்கும் அம்மா
றென்பவரின் வீட்டினது முதலிலுள்ள பிரதான வாயிலின் கண் வந்து சேர்ந்தேன்.
|