இரண்டாம் பாகம்
2847.
மாதவ னெனும்அம் மாறு மதிமுகங் கண்டே னாளுங்
காதலித் திருந்த நெஞ்சுங் கண்களுங் களிப்ப நுந்தம்
பாதபங் கயத்தைக் கண்டேன் பருவர றவிரக் கண்டேன்
றீதறும் பெரும்பே ரின்பச் செல்வமுங் கண்டே னென்றான்.
80
(இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்து மகா தவத்தை யுடையவரெனக்
கூறா நிற்கும் அம்மா றென்பவரின் சந்திரனை நிகர்த்த வதனத்தைப் பார்த்தேன். பிரதி தினமும்
ஆசித் திருந்த மனமும் இரு விழிகளும் மகிழ்ச்சி யடையும் படி உங்களது சரணங்களாகிய தாமரைப்
புட்பங்களைப் பார்த்தேன். எனது துன்பங்க ளொழியப் பார்த்தேன். குற்ற மற்ற பெருமையை யுடைய
பேரின்பத்தினது ஆக்கத்தையும் பார்த்தே னென்று சொன்னான்.
2848.
செவ்வியன் கபுகா பென்னுஞ் செம்மல்சொல் லனைத்துங் கேட்டு
நவ்விமுன் னவின்ற தூதும் நகைமுக மலர வான்மட்
டெவ்விடத் தினுங்கு லாவு மிருஞ்சிறை யொடுக்கி நீண்ட
குவ்விடத் தினிதின் வந்தார் சபுறயீ லென்னுங் கொண்டல்.
81
(இ-ள்) அழகை யுடையவனாகிய
அந்தக் கபுகா பென்று சொல்லும் மன்னவன் சொல்லிய யாவற்றையும் மானினது முன்னர்ப் பேசிய
றசுலான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுங்
காதுகளினாற் கேள்வி யுற்றுப் பிரகாசத்தை யுடைய வதன மானது மலர்ச்சியடைய, ஜிபுரீ லலைகிஸ்ஸலா
மெனக் கூறும் மேக மானவர் ஆகாயம் வரை எவ்விடத்திலும் பிரகாசியா நிற்குந் தங்களின் பெரிய
சிறகுகளைச் சுருக்கி நீட்சியை யுடைய இப் பூமியின் கண் இனிமையுடன் வந்து சேர்ந்தார்கள்.
2849.
ஒல்லையி னிழிந்த னாதி யோதிய சலாமுங் கூறிச்
செல்லுலாங் கவிகை வள்ளற் சீதசெம் முகத்தை நோக்கி
யல்லலில் கபுகா பென்னு மன்பருக் குற்ற பேறை
மல்லலம் புவனம் போற்றும் வானவர்க் கரசர் சொல்வார்.
82
(இ-ள்) அவ்வாறு வான
லோகத்தை விட்டும் விரைவிலிறங்கி அநாதி யாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் கூறிய
ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்ற சலாமுஞ் சொல்லி உலாவா நிற்கு மேகக் குடையை யுடைய வள்ளலான நாயகம்
நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின்
குளிர்ச்சி தங்கிய செந் நிறத்தைக் கொண்ட வதனத்தைப் பார்த்துத் துன்ப மற்ற கபுகா பென்று
சொல்லும் அன்பினருக்குப் பொருந்திய பதவியை வளமையையும்
|