பக்கம் எண் :

சீறாப்புராணம்

1067


இரண்டாம் பாகம்
 

மறைந்த திடரின் கண்ணும் அருவியினது நீரை யுடைய தானத்தின் கண்ணும் அதிகமாகப் பரப்புற்று மேய்ந்தன.

 

2879. காத்திரக் கோலு நீள்கடை காலுந்

          தரித்திடுங் கரத்தினிற் சிரத்தைச்

     சேர்த்துகு பான்கண் டுயிறரும் வேளை

          சிறுசெவி பெரியவாய்த் தீக்கட்

     கூர்த்தவள் ளுகிர்க்கா னீண்டவால் வரியார்

          கொடிப்புலி கொடியவெம் பசியாற்

     போர்த்தனன் பொதும்பர் நீத்தெழுந் தருங்காண்

          புறத்தினன் னிரையை நோக் கியதால்.

13

      (இ-ள்) அந்த உகுபா னென்பவன் தனது காத்திரக் கோலையும் நீண்ட கடைகாலையும் பூண்ட கைகளில் தனது தலையைப் பொருத்தி விழிகளை மூடி நித்திரை செய்கின்ற சமயத்தில், சிறிய காதுகளையும், பெரிய வாயையும், அக்கினியை யொத்த கண்களையும், மிகுத்த கூர்மையைக் கொண்ட நகங்களினது கால்களையும், நீண்ட வாலையுமுடைய இரேகைகளைப் பொருந்திய ஓர் கொடிப்புலியானது கொடுமையை யுடைய வெவ்விய தன் பசியினால் மூடிய தனது குகையை விட்டு மெழும்பி அருமையான காட்டினது பக்கத்திலுள்ள நல்ல ஆட்டின் கூட்டத்தைப் பார்த்தது.

 

2880. காய்ந்தவெம் பசியால் விரைவுட னடந்தோர்

          கல்லடி யிடத்தினி லொதுங்கி

    வாய்ந்தகான் மடக்கிப் பயப்பயப் பதுங்கி

          வல்லுடல் சுருக்கிவா னிமிர்த்துப்

    பாய்ந்தொரு கொறியைப் பிடித்தது கானின்

          பரப்பெலாந் திசைதிசை வெருண்டு

 v    சாய்ந்தன சிறுவாற் பேருடற் கவைக்காற்

          றுருவைக டலைமயங் கிடவே.

14

      (இ-ள்) அவ்வாறு பார்த்து வற்றிய வெவ்விய தனது பசியினால் விரைவோடும் நடந்து ஒரு கல்லினது அடிவாரத்தின் கண் ஒதுங்கிச் சிறந்த கால்களை மடக்கி மெல்ல மெல்ல ஒளித்து வலிமையைப் பொருந்திய சரீரத்தைச் சுருங்கச் செய்து வாலை நிமிரப் பண்ணிச் சாடி ஒரு ஆட்டைப் பற்றிற்று. அதனால் சிறிய வாலையும் பெரிய சரீரத்தையும் பிளந்த பாதங்களையு முடைய ஆடுகள் கலந்து மருண்டு அந்தக் காட்டினது பரப்புக ளெல்லாவற்றிலும் திசை திசை சாய்த லுற்றன.