பக்கம் எண் :

சீறாப்புராணம்

1068


இரண்டாம் பாகம்
 

2881. தீயென மிளிர்கட் கொடிப்புலிப் பேழ்வாய்ச்

          சிக்கிய துருவையின் பலகால்

     வாயெனுந் தொனிகேட் டருந்துயி லிழந்து

          மனத்திடுக் கொடுமெழுந் துகுபான்

     வீய்வுறுங் கொறியின் றொனியிதென் றேங்கி

          விரைவொடு மொருதிட ரேறிப்

    போயிரு நான்கு திசையினு நோக்கிக்

          கொறியினம் பொருந்தல்காண் கிலனால்.

15

      (இ-ள்) அவ்வாறு சாய்த லுற, அந்த உகுபா னென்பவன் நெருப்பைப் போலும் பிரகாசிக்கின்ற விழிகளை யுடைய அந்தக் கொடிப் புலியினது பெரிய வாயிலகப்பட்ட அவ் வாட்டின் ஊது சூழலினது ஓசையென்று சொல்லா நிற்கும் முழக்கத்தைப் பல தடவை கேள்வியுற்றுத் தான் செய்த அரிய நித்திரையை யொழித்து இதயத்தினது பயத்தோடும் எழும்பி இம் முழக்கமானது சாவையுடையப் பெறுகின்ற ஆட்டினது முழக்கமே யென்று இரங்கி வேகத்துடன் சென்று ஒரு திடரின் கண் ஏறி எண்டிசைகளிலும் பார்த்து ஆட்டுக் கூட்டங்கள் அங்கு நிலைத்து நிற்பதைக் காணாதவனாயினான்.

 

2882. சிதறின கூண்டு நின்றில விரண்டு

          செவிகளு மடைப்பவித் திசையிற்

     கதறிய தெனநின் றோடின னவணிற்

          காண்டனன் கொறியொடும் புலியைப்

     பதறினன் சினையா டென்பதி னிரங்கிப்

          படர்ந்தனன் வெகுண்டனன் படுமுள்

     ளுதறினன் றொறுவர்க் கூவினன் சிறுதூ

          றொடிபட வோடினன் றொடர்ந்தே.

16

      (இ-ள்) அன்றியும், அவன் ஆடுகள் சிதறுலுற்றன. கூடி நின்றிலன. இரு காதுகளும் அடைக்கும் வண்ணம் இந்த திக்கிற்கத்தின தென்று விரைந்து போய் அங்கு நின்றான். அவ்விடத்தில் ஆட்டுடன் புலியையும் பார்த்தான். அஃது சினையா டென்பதினால் நடுங்கினான். இரக்க முற்று நடந்தான். கோபித்தான். பாதங்களிற்பட்ட முட்களை யுதறினான். இடையர்களைக் கூப்பிட்டான். சிறிய செடிகள் ஒடியும்படி அப்புலியைப் பின்பற்றி ஓடினான்.

 

2883. எடுத்தனன் பெருங்கல் விண்ணெனத் துரத்தி

          யெறிந்தன னார்த்தனன் கோலாற்

     புடைத்தனன் கொறியைக் கைவசப் படுத்திப்

          புலியினை யொருபுறம் போக்கி