இரண்டாம் பாகம்
2918.
புறத்தி னிற்புகு தாதடைத் தருந்திடும் பொசிப்பைக்
குறைத்து வைகலு மிதமறப் பேசியுங் கொடிதாய்ச்
செறுத்துந் தீவினை செயத்துணிந் தவர்களே யன்றி
மறுத்தும் வேண்டுமென் றெள்ளள வினுமதித் திலரே.
27
(இ-ள்) வெளியில்
புகுந்து செல்லாது அவ்வாறு வீட்டின் கண் அடைத்து யானுண்ணு முணவையுஞ் சுருக்கி என்னைப் பிரதி தினமும்
இனிமையற ஏசியுங் கொடிதாக விலக்கியும் வெவ்விய துன்பங்களைச் செய்யத் துணிந்தவர்களே யல்லாமல்
மீண்டும் வேண்டுமென்று எப் பிரமாண மாயினும் சிந்தையின் கண் மதித்தார்களில்லர்.
2919.
ஈத லாற்பெருங் கொடுமையிற் றொடரிடர் படுத்துந்
தீதெ லாமொரு துயரெனக் குறித்திலின் சிறியேன்
காதும் வெஞ்சினத் தவரிவன் தீனிலைக் கருத்திற்
கோதி நின்றன னிடர்க்கடங் கிலனெனக் குறித்தார்.
28
(இ-ள்) இஃதன்றியும்,
கொல்லுகின்ற வெவ்விய கோபத்தையுடைய அவர்கள் துன்பப் படுத்திய பெரிய கொடுமையினாற் றொடர்ந்த
தீமைக ளெல்லாவற்றையும் சிறியே னாகிய யான் ஓர் துன்பமென்று மதித்தே னல்லேன். அதனால் அவர்கள்
இவன் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமையைச் சிந்தையின் கண் கோதி நிற்கின்றான். நாம்
செய்யுந் துன்பங்களுக்கு அமைந்திலா னென்று மனதின் கண் மதித்தார்கள்.
2920.
அடிமை கொண்டவ ருரைவழிக் கேவலி னாளாய்
முடியு மேலவ னுட்கருத் தின்படி முடியும்
படியின் மாறுகொண் டிகலுமே லுடலுயிர் பதைப்பத்
தடிவ ரென்பதற் கையமி லெனவுரைத் தனரால்.
29
(இ-ள்) அவ்வாறு மதித்துத்
தொண்டாய்க் கொள்ளப் பெற்றவரின் சொல்லினது ஒழுங்கிற்கு ஏவலாகச் செய்ய முடியுமானால் அத்
தொண்டனது மனவெண்ணத்தின் பிரகாரம் அவ்வெண்ணமும் நிறைவேறும். அவ்வித மின்றி இப்பூமியின்
கண் விரோதத்தைப் பெற்றுப் பகைப்பா னானால் அவனது ஆவியுஞ் சரீரமும் துடிக்கும் வண்ணம் அவனை
அவர்கள் கொல்லுவார்க ளென்பதற்குச் சந்தேகமில்லை யென்று கூறினார்கள்.
2921.
என்ம னத்தின்வே றிலைமுகம் மதுநபிக் கீமா
னன்ம னத்தொடுங் கொளப்பொருந் தினனென்னை நாடி
வன்ம னத்தினை வெறுத்தொரு வழிப்படுத் துவிரேற்
சொன்ம றுத்தில னுரைமின்க ளெனத்தொகுத் துரைத்தேன்.
30
|