பக்கம் எண் :

சீறாப்புராணம்

1087


இரண்டாம் பாகம்
 

சிந்தையின் கண் சிந்தித்து இதற்குப் பொருந்திய ஓர் மார்க்கத்தை எனக்குச் சொல்லுவீர்க ளாக வென்று கேட்டான்.

 

2925. பாரி சென்னுமவ் வூரவன் பகர்ந்தசொல் லனைத்தும்

     வேரி யம்புய முகம்மது கேட்டகம் விரும்பிச்

     சாரு நல்வழிக் குரியனென் றுளத்திடை தரித்து

     மாரி போன்றுநன் மறைதரு வாய்திறந் துரைப்பார்.

34

      (இ-ள்) பாரி சென்று கூறா நிற்கும் அவ் விராச்சியத்தை யுடையவனான அந்தச் சல்மா னென்பவன் அவ்வாறு கூறிய வார்த்தைக ளெல்லாவற்றையும் வாசனையைக் கொண்ட அழகிய தோள்களை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கேள்வியுற்று மனமானது உவகையுறப் பெற்று இவன் பொருந்திய நல்ல சன்மார்க்கத்திற் குரிமை யானவ னென்று தங்களி னிதயத்தின் கண் தாங்கி மேகத்தைப் போலும் நன்மை பொருந்திய வேத வசனங்களைத் தருகின்ற வாயைத் திறந்து சொல்லுவார்கள்.

 

2926. இருநி லத்திடை பிறந்துநன் னபியென விவணின்

     வருவ ரென்றெனைத் தேடிய வுண்மைவல் லவர்க

     ளரிதிற் காண்கினு மிறக்கினு மும்மத்தி னவராய்ப்

     பெருகுந் தீனில்ச லாமத்துப் பெறுவர்க ளென்றே.

35

      (இ-ள்) பெருமை யுற்ற இப் பூமியின் கண் நன்மை பொருந்திய நபி யென் றவதரித்து இந்தத் திரு மதீனமா நகரத்தினிடத்து வருவார்க ளென்று அருமை யோடும் என்னைத் தேடிய சத்தியத்தை யுடைய வல்லுநர்கள் என்னைத் தெரிசித்தாலும் தெரிசியாது மரித்தாலும் எனது உம்மத்தினர்க ளாய் ஓங்கா நிற்கும் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தால் சலாமத்தையடைவார்கள்.

 

2927. பழுதி லாதவ னுரைத்தநன் மறைமொழிப் படியே

     தழுவி வெங்குபிர் களைதர வேல்வலந் தரித்தோய்

     வழுவி முன்விலை கொண்டவ ருரைத்திடும் வழியே

     யெழுதி நீகொடுத் திவண்வரு கெனநபி யிசைத்தார்.

36

      (இ-ள்) அன்றியும், வலது கையின் கண் வேலாயுதத்தைத் தாங்கிய சல்மானே! களங்க மற்றவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் சொல்லிய நன்மை பொருந்திய வேத வசனப் பிரகாரம் ஏற்றுக் கொண்டு வெவ்விய குபிர் மார்க்கத்தை யொழிக்கத் தவறி ஆதியில் உன்னைக் கிரயமாகப் பெற்ற அவர்கள் கூறிய வண்ணம் நீ எழுதிக் கொடுத்து இவ் விடத்தில் வருவாயாக வென்று நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சொன்னார்கள்.