பக்கம் எண் :

சீறாப்புராணம்

1090


இரண்டாம் பாகம்
 

2934. எய்த்தி டாப்புகழ் நபிதிருக் கரத்தினி லெடுத்து

     வைத்த கன்றுக ளியாவும்வா னுலகுற வளர்ந்து

     நெய்த்து வீறோடுந் திரண்டன நெருங்கின நிறைகண்

     மொய்த்த பூங்குலை சாய்த்தன காய்த்தன முழுதும்.

43

      (இ-ள்) அவ்விதம் நட்ட, மெலியாத கீர்த்தியை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களின் தெய்வீகந் தங்கிய கைகளினாற் றாங்கி நட்டி வைத்த கன்றுக ளனைத்துந் தேவலோகத்தி னிடத்துப் பொருந்தும்படி ஓங்கிக் கொழுத்துப் பெருமை யோடும் திரட்சி யுற்றுச் செறிந்து முழுதுங் காய்த்து நிறைந்த கண்கள் மொய்க்கப் பெற்ற அழகிய குலைகளைச் சாய்த்தன.

 

2935. கலந்து நின்றமெய்த் தோழரி லொருவர்கை யார

     நிலத்த னிற்பதித் திருந்தகன் றொன்றுமந் நிலையா

     யுலந்து நின்றது கண்டுநந் நபியொளிர் கரத்தா

     னலந்த ரும்படி யெடுத்ததை மறுத்துநட் டினரால்.

44

      (இ-ள்) அன்றியும், அங்கு கலப் புற்று நின்ற உண்மை நேசர்களாகிய அசுஹாபிமார்களில் ஒருவ ரான அந்த விருத்தாப்பியர் தமது கையினாற் பொருந்தும்படிப் பூமியின் கண் நட்டி வைத்திருந்த அந்த ஓரீத்தங் கன்றும் அந் நிலையாகவே வாடி நின்றது. அஃதை நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பார்த்துப் பிரகாசியா நிற்குங் தங்களின் கையினால் எடுத்து நலத்தைத் தரும் வண்ணம் மறுத்தும் நட்டினார்கள்.

 

2936. ஈத்தங் காவகம் பனிரண்டு வருடத்தி னியல்பாய்க்

     காய்த்து நற்பலன் றருதல்போல் நபிசெழுங் கரத்தால்

     வாய்த்து மாதம்பன் னிரண்டினிற் குறைவற வளர்ந்து

     பூத்துக் காய்த்துநற் பழக்குலை யொடும்பொருந் தினவால்.

45

      (இ-ள்) அவ்விதம் நட்ட, அந்த ஈத்த மரச் சோலை யானது பன்னிரண்டு வருடத்தினது இயல்பினை யுடைய தாகக் காய்த்து நல்ல பிரயோசனத்தைக் கொடுப்பதைப் போலும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் செழிய கையினாற் குறைவின்றிச் சிறந்து பன்னிரண்டு மாதங்களில் ஓங்கிப் புட்பித்துக் காய்த்து நல்ல பழத்தினது குலைகளோடும் நிலைத்து.