இரண்டாம் பாகம்
2937.
மதுர மூறிய பழக்குலை பொறுக்கிலா
வளைந்து
சிதறு கின்றன துடவைகண்
டருங்களி சிறந்து
நுதிகள் வேல்வலந் தாங்குசல்
மான்றனை நோக்கி
யிதுகொல் நீயவர்க் களித்திடு
நிதியமென் றெடுத்தார்.
46
(இ-ள்) அன்றியும், இனிமை
யானது சுரக்கப் பெற்ற பழங்களினது குலைகளை அம் மரங்கள் சுமக்காது வளைந்து சிந்துகின்றன வாகிய
அந்தச் சோலையை நோக்கி அரிய மகிழ்ச்சி யானது சிறக்கப் பெற்று முனைகளைக் கொண்ட வேலாயுதத்தை
வலது கையின் கண் தாங்கிய அந்தச் சல்மா னென்பவனைப் பார்த்து நீ அவர்களுக்குக் கொடுக்கும்
தங்கம் இது வென்று எடுத்தார்கள்.
2938.
சிறைகொள் வாரண
மிடுஞ்சினை யளவெனத் திரண்ட
நிறையில் காஞ்சனத் தினிற்றிரு
வாயுமிழ் நீராற்
குறைவி லாதுறத் தடவிநற் செழுங்கரங்
கொண்டு
மறுவி லாதசல் மான்மலர்க்
கரத்தில்வைத் தனரால்.
47
(இ-ள்) அவ்வா றெடுத்த
சிறகுகளைக் கொண்ட கோழிகளானவை யிடுகின்ற முட்டைப் பிரமாண மெனத் திரட்சி யுற்ற இடையிலுள்ள
இரும்பில் தங்களின் தெய்வீகந் தங்கிய வாயின் உமிழுகின்ற நீரினால் குறைவின்றிப்
பொருந்தும் வண்ணந் தேய்த்து நன்மையைப் பெற்ற செழிய கையினாற் றாங்கிக் குற்ற மற்ற அந்தச்
சல்மா னென்பவனின் தாமரைப் புஷ்பத்தை நிகர்த்த கையில் வைத்தார்கள்.
2939.
இறைக்குந் தேன்கனித் துடவையு
மவர்களுக் கீந்து
குறிக்கும் பொன்னையு முன்னரி
னெழுதிநீ கொடுத்த
நிறைக்கு ளெவ்வள வவ்வள விந்தமா
நிதியி
னறுக்கி யீந்திடு கென்றனர்
முகம்மது நபியே.
48
(இ-ள்) நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு வைத்து மதுவைச்
சிந்தா நிற்கும் பழங்களை யுடைய அந்த ஈத்த மரச் சோலையையும் அவர்களுக்குக் கொடுத்துக் குறித்த
தங்கத்தையும் ஆதியில் நீ வரைந் தளித்த இடைக்குள் எவ்வளவோ? அவ் வளவை இந்தப் பெருமை
பொருந்திய தங்கத்தில் நின்றும் கண்டித்துக் கொடுப்பாயாக வென்று கற்பித்தார்கள்.
2940.
பொன்னை வாங்கிவெண்
டுகிலினி லிறுகுறப் பொதிந்து
பன்னு நந்நபி முகம்மது
னிருபதம் பணிந்து
துன்னு தோழர்க ளியாரையு
மினிதுறத் துதித்துத்
தென்னு லாமரைப் பதம்பெயர்த்
தெழுந்தனன் றிறலோன்.
49
|